சங்கடமா இருக்கு.. அந்த காட்சிகள் இல்லாம படம் எடுக்க முடியாதா? மலையாள நடிகர் ஆவேசம்!
சென்னை: முத்தக் காட்சிகள் படத்தில் அதிகப்படியாக இருக்கிறது என்றாலே அவை பேசு பொருளாக மாறும். அதுவும் லிப்லாக் முத்தக் காட்சி என்றால் படத்தின் பாதி புரோமோசன் வேலைகளை அந்த முத்தக் காட்சி சீன் குறித்து பேசி பேசியே படக்குழு ஒப்பேத்தி விடும். இப்படி இருக்கும்போது, லிப்லாக் முத்தக்காட்சி தேவையில்லாதது என மலையாள நடிகர் ஷேன் நிகம் தெரிவித்துள்ளார். அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
மலையாள நகைச்சுவை நடிகர் அபி-யின் மகன் தான் ஷேன் நிகம். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான கிஸ்மத் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவர் கவனத்தை ஈர்த்தவர் என்றாலும், இவருக்கு நல்ல பெயரையும் பாராட்டுகளையும் வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது 2019ஆம் ஆண்டு வெளியான கும்பளாங்கி நைட்ஸ் படம் தான். அதே ஆண்டு வெளியான இஸ்க் படமும் அவருக்கு பாராட்டுகள் பெற்றுக் கொடுத்தது.
ஷேன் நிகம் எந்த அளவுக்கு குறுகிய காலத்திலேயே அதிகப்படியான பாராட்டுகளையும் கவனத்தையும் ஈர்த்தாரோ அதே அளவுக்கு, சர்ச்சைகளுக்குள்ளும் சிக்கினார். படப்பிடிப்புத் தளத்தில் அவருக்கும் தயாரிப்பாளர் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் படத்தில் இருந்து எல்லாம் நீக்கப்பட்டார் ஷேன் நிகம். அதன் பின்னர் மெல்ல மெல்ல தன் மீது இருந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து, தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.

ஷேன் நிகம்: தமிழில் இவர் மெட்ராஸ்காரன் படத்திலும் நடித்துள்ளார். இந்த படமும் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. தற்போது கபடியை மைய்யமாக கொண்ட பல்டி படத்திலும் கமிட் ஆகியுள்ளார். இந்த படம் இவரது 25வது படம். மேலும் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அவர் படத்தில் இடம் பெறும் லிப் லாக் முத்தக் காட்சிகள் குறித்து தனது அபிப்ராயத்தை தெரிவித்துள்ளார். அதாவது, " என்னைப் பொறுத்தமட்டில் லிப்லாக் முத்தக் காட்சிகள் தேவையில்லாதது.
வேறு காட்சிகள்: காதலை வெளிப்படுத்த லிப்லாக் முத்தக் காட்சிகள் தான் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. காதலின் நெருக்கத்தை வேறு காட்சிகளில் கூட காட்ட முடியும். அதேநேரத்தில் ஒரு காட்சியில் லிப் லாக்கில் நான் நடிக்க வேண்டும் என இயக்குநர் கூறினால், நான் நடிக்கத்தான் செய்வேன். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் ஒரு படத்தை நான் குடும்பத்துடன் அமர்ந்து எந்தவிதமான சங்கடமும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்பதுதான்" எனத் தெரிவித்துள்ளார்.
வரவேற்பு: அவரது இந்த கருத்து தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் பலர் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். லிப்லாக் முத்தக் காட்சியை வைத்துத்தான் காதலின் நெருக்கத்தை காட்ட வேண்டும் என்றில்லை என்ற ஷேன் நிகமின் கருத்து பாராட்டுக்குரியது எனவும் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











