Tovino Thomas: எல்லா சினிமா ஃபீல்டுலயும் இந்த பிரச்சினை இருக்கு.. டொவினோ தாமஸ் ஓபன்!
சென்னை: கடந்த 2017ம் ஆண்டில் கேரளாவில் நடிகை ஒருவர் காரில் வைத்து கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவினர் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த விஷயத்தில் மலையாள திரைத்துறையில் நடிகைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விஷயத்தில் பல மலையாள நடிகர்கள், நடிகைகள் தொடர்ந்து தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூறி வருகின்றனர். இந்நிலையில் மலையாள திரை உலகில் மட்டும் இது போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் இல்லை என்றும் பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மலையாள திரையுலகம்: கடந்த 2017ம் ஆண்டில் நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டது தொடர்பாக மலையாள திரையுலகில் கொந்தளிப்பு ஏற்பட்டது. முன்னணி நடிகைகள் பலரும் தாங்களும் இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக தெரிவித்தனர். தொடர்ந்து மலையாள திரையுலகில் நடிகைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி மிகப்பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. நடிகைகள் பார்வதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகைகள், போராட்டக் குழுவினர் கடந்த 2017ம் ஆண்டிலேயே முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து இதுகுறித்து கோரிக்கை வைத்தனர்.
நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை: இதையடுத்து நீதிபதி ஹேமா தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இந்த குழு கடந்த 2019ம் ஆண்டிலேயே இந்த அறிக்கையை சமர்ப்பித்த நிலையில், ஆனாலும் இந்த அறிக்கையை வெளியிட தடை இருந்த நிலையில் தற்போது இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 233 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிக்கை பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
நடிகர் டோவினோ தாமஸ் கருத்து: இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் இந்த விவகாரத்தில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இந்த ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். பெண்களுக்கு எதிராக நடக்கும் இதுபோன்ற கொடுமைகளுக்கு உரிய நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நடிகைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் இதுபோன்ற பாலியல் சீண்டல்கள் மலையாள திரையுலகில் மட்டுமே இருப்பதாக சிலர் விமர்சிப்பது வருத்தமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
எல்லா திரைத்துறையிலும் பாலியல் துன்புறுத்தல்கள்: நடிகைகளுக்கு பாலியல் சீண்டல்கள் இருப்பது அனைத்து திரைத்துறையிலும் நடந்து வருவதாகவும் டொவினோ தாமஸ் குறிப்பிட்டுள்ளார். மலையாள திரையுலகில் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் வெளிவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனால் மலையாளத் திரையுலகில் மட்டுமே இத்தகைய பாலியல் சீண்டல்கள் இருப்பதாக சிலர் இழிவுபடுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து திரைத்துறையிலும் இது போன்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











