மலையாள நடிகை வழக்கு.. திலீப் விடுதலையால் மனம் நொந்த நடிகை.. நேரிலே பார்த்தவர் என்ன சொல்றாங்க பாருங்க
கொச்சி: கடந்த 8ஆம் தேதி மொத்த கேரளாவும் காத்துக் கொண்டிருந்த தகவல் என்பது, நடிகையை கடத்தி துன்புறுத்திய வழக்கில் கடைசி மற்றும் 8 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் நடிகர் திலீப். காவல்துறை சுமார் 8 ஆண்டுகளாக விசாரணை நடத்திய பின்னர், நீதிமன்றம் கடந்த 8ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்று விடுவிக்கப்பட்டார். இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. ஆனால் பாதிக்கப்பட்ட நடிகைக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலர் நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்தே வருகிறார்கள்.
இது தொடர்பாக நடிகையை நேரில் சந்தித்த மலையாள டப்பிங் கலைஞர் பாக்ய லட்சுமி கூறுகையில், " தீர்ப்பு நாளில் நாங்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட நடிகையின் வீட்டில் இருந்தோம். நான், நடிகையின் இரண்டு சகோதரிகள் மற்றும் அவரது தோழிகள் உட்பட அங்குதான் இருந்தோம். நடிகையின் அம்மாவும் எங்களுடன் இருந்தார். நடிகை மட்டும் அவரது அறையில் இருந்தார். நாங்கள் அனைவரும் டிவி முன் அமர்ந்து நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வழங்குகிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டு இருந்தோம்.

நடிகை வருத்தம்: 7வது குற்றவாளி விடுவிக்கப்பட்டதும், நான் டிவியை நிறுத்திவிட்டேன். இனி யாரும் தண்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று சொன்னேன். நடிகை மிகவும் அதிர்ச்சியாக அமர்ந்து கொண்டு இருந்தார். இதற்கு அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்று நடிகை கேட்டபோது எங்களிடம் பதிலே இல்லை. மாலை வரை அனைவரும் அமைதியாக இருந்தோம். யாரும் சாப்பிடக் கூட இல்லை.
மேல்முறையீடு: மேல்முறையீடு செய்வது குறித்துக் கூட நாங்கள் எதுவும் பேசவில்லை. எங்களின் பிரதான நோக்கமாக இருந்தது, நடிகையை ஆறுதல்படுத்துவதுதான். நடிகை ஏற்கனவே இந்த விசாரணையில் பல நெருக்கடிகளை அனுபவித்து மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். இப்படி இருக்கும்போது நடிகையிடம் வேறு எதுவும் பேச நாங்கள் தயாராக இல்லை. நாங்கள் அனைவரும் உடன் இருக்கிறோம், ஆனாலும் அவரது கணவர் ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு முறையும் போன் செய்து விசாரித்துக் கொண்டே இருந்தார். அவருக்கு காய்ச்சல் என்பதால் அவர் வெளிநாட்டில் இருந்து வர முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது" என்று அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சைப் பார்க்கும்போது, நடிகை மேல் முறையீட்டுக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது என பலரும் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











