Vedan: அதிகாரங்களை அடித்து நொறுக்கும் ராப் பாடகர் வேடன்.. புலிப் பல், கஞ்சா என சுற்றும் சர்ச்சைகள்.. ஏன்?
கொச்சி: மலையாள ராப் பாடகர் வேடன். அவர் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அதிகம் உலா வருகிறது. குறிப்பாக எடிட் செய்யப்பட்ட ஒரு வீடியோவின் தொடக்கத்தில் காவல்துறையினர் ராப் பாடகர் வேடனை கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். அதே வீடியோவின் இறுதியில் அதே காவல்துறையினர் வேடன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றிற்கு பாதுகாப்பு அளிக்க வரிசைகட்டி நின்று கொண்டு இருக்கிறார்கள்.
இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு, இணையவாசிகள் மத்தியில் தொடர் பாராட்டுகள் என வேடன் கேரளாவில் கவனிக்கப்படும் இடத்திற்கு உயர்ந்து நிற்கிறார். வேடன் அடிப்படையில் ராப் பாடகர். இவரது ராப் பாடல்கள் அரசியல் தளத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தும் அளவுக்கு இருந்து வருகிறது. ஜாதி, மத, பாலின வேற்றுமைகளை அடித்து நொறுக்கும் அளவுக்கு அவரது பாடல்களும் அதை அவர் பாடும் விதமும் அமைந்து வருகிறது. குறிப்பாக இவரது பாடல்களில் அரசியல் கட்சியான பாஜக, இந்துத்துவ அமைப்புகள், பிரிவினைவாத தத்துவங்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

வேடன் தொடர்பாக பரவிவரும் வீடியோக்களில் அவர் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் பாடல்களில் இடம் பெற்ற பீப் பாடலை பாடும் பழைய வீடியோவும் ஒன்று. அதேபோல் மற்றொரு வீடியோவில், " நான் பறையன் அல்ல, புலயன் அல்ல, பாணன் அல்ல.. நீ தம்புரானும் அல்ல" என்ற வரிகள் அடங்கிய பாடலைப் பாடுகிறார். வேடன் கடந்த 2020ஆம் ஆண்டு தி வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ் லெஸ் என்ற ஆல்பத்தை வெளியிட்டார். இந்த பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ராப் பாடகர் வேடன்: அதைத் தொடர்ந்து பல இசைக் கச்சேரிகளை வேடன் நடத்தியுள்ளார். 2021ஆம் ஆண்டில் இருந்து மலையாள சினிமாவில் அவர் பாடல்களைப் பாடி வருகிறார். இவரது பாணி பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படியான ராப் பாடகர் வேடன் மீது சில அதிரடியான புகார்களும் முன் வைக்கப்பட்டு வருகிறது. இது மட்டும் இல்லாமல் தன் மீதான சில புகார்களை வேடனே ஒப்புக் கொள்ளவும் செய்துள்ளார்.

கஞ்சா & புலி பல்: அதாவது கடந்த 2021ஆம் ஆண்டு வேடன் மீது பாலியல் புகாரான மீ டூ புகார் முன் வைக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து வேடன் தன் மீதான தவறை பகிரங்கமாக ஒப்புக் கொண்டதோடு, மன்னிப்பும் கேட்டார். அதேபோல் ராப் பாடகர் வேடனின் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியதில் அவரது வீட்டில் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் கைதும் செய்யப்பட்டார். அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவரை சில மணி நேரங்களிலேயே கேரள காவல்துறை மீண்டும் கைது செய்தது. இந்த முறை அவரது கழுத்தில் அணிந்திருந்த நெக்லஸில் புலியின் பல் இருந்ததாக கூறினார்கள்.
எதிர்ப்பும் - ஆதரவும்: ஆனால் இந்த முறையும் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் வெளியே வந்த வேடன், " நான் என்னைத் திருத்திக் கொள்வேன். சிறந்த மனிதனாக மாறுவேன். அதற்கான எல்லா முயற்சிகளையும் எடுப்பேன். எனது பாடல்கள் விரும்புபவர்கள் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் தீய பழக்கங்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார். தற்போது இணையத்தில் அவரது பழைய வீடியோக்களை பகிர்ந்து வேடன் மீது சில பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்கள். இந்நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் சோசியல், கவிஞர் விடுதலை சிகப்பி போன்றோர், வேடனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக We Stand With Vedan என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











