Mammootty: மெகா ஹிட் படத்தில் நடித்த மம்முட்டி! ஒத்த பைசா கூட சம்பளமே வாங்கல.. நடிகர் சுவாரஸ்ய தகவல்
சென்னை: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தமிழ் படங்களில் நடிக்கும் கதாநாயகர்கள் வேற்று மொழியில் நடிக்கும் கதாநாயகர்கள் என்றெல்லாம் எந்த வித்தியாசமும் கிடையாது. படம் நன்றாக இருந்தால் படத்தை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்கள். அதனால்தான் வேற்று மொழிகளில் சூப்பர் ஸ்டாராக உள்ள பல முன்னணி நடிகர்கள் நேரடி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து தமிழ் நாட்டில் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளனர். அப்படியான சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் நடிகர் மம்முக்கா எனப்படும் மம்முட்டி.
இவர் தமிழில் 30க்கும் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் அதில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான தமிழ் படம் என்றால் அது ராமின் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான பேரன்பு படம் தான். இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக மம்முக்காவின் நடிப்பிற்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.

இதுமட்டும் இல்லாமல் இவரது நடிப்பில் வெளியான படங்களில் தளபதி, மறுமலர்ச்சி, மக்களாட்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் உள்ளிட்ட படங்கள் இப்போது தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பினாலும் மக்கள் ரசித்துப் பார்க்கும் படங்களாக உள்ளது. இதில் ஆனந்தம் படம் முழுக்க முழுக்க குடும்பக்கதை. படத்தின் பாடல்களும் ஹிட் ஆனதால் படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்த படமாகிப் போனது. படத்தில் முரளி, அப்பாஸ், தேவையாணி, சினேகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். லிங்குசாமி இயக்கிய இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலை எழுதியதன் மூலம் யுகபாரதி தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார்.

மம்முட்டி: இந்த படத்தில் மம்முட்டி வீட்டில் வேலைக்காரராக நடித்திருப்பார் நடிகர் பவா லக்ஷ்மனன். இவர் அந்தப் படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பிலும் பணியாற்றினார். இந்த படம் தொடர்பாக பேட்டி ஒன்றில் அவர் பேசுகையில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதில், லிங்குசாமி கேரளாவில் உள்ள மம்முட்டியைச் சந்தித்து கதை சொன்னபோது நானும் உடன் இருந்தேன். படத்தின் கதையை லிங்குசாமி சொல்லிக் கொண்டு இருக்கின்றார். மம்முட்டி லிங்குசாமியை மதிக்காமல் ஷோபாவில் அமர்ந்து கொண்டு வானத்தைப் பார்த்ததைப் போல் கதையைக் கேட்டுக் கொண்டு இருந்தார்.

சம்பளமே வாங்கல: படத்தின் இடைவேளைக் காட்சி வரும்போது, குறுக்கிட்ட மம்முட்டி, "லிங்குசாமி ஒரு டீ குடுச்சுட்டு அதுக்கு அப்பறம் தொடரலாமா" எனக் கேட்டார். படத்தின் மொத்த கதையையுமே சொல்லி முடித்த பின்னர் லிங்குசாமியை கட்டிப் பிடித்துக் கொண்டார் மம்முட்டி. கேரளாவில் இருந்து உடனே சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சௌத்ரி சாருக்கு போன் போட்டு, " சௌத்ரி சாரே நான் இந்த கதையில் நடிக்கிறேன் எனக் கூறியது மட்டும் இல்லாமல், அந்தப் படத்தில் தனக்கு சம்பளம் வேண்டாம் எனக் கூறினார். ஏன் எனக் கேட்டபோது நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு நல்ல கதையைக் கேட்டுள்ளேன் அதனால் எனக்கு சம்பளம் வேண்டாம் என சம்பளமே இல்லாமல் நடித்தார்.

ஆனால் சௌத்ரி சாரோ சம்பளம் கொடுக்காமல் இருந்தால் எப்படி என யோசித்துவிட்டு கேரளாவில் படத்தினை ரிலீஸ் செய்யும் உரிமையை மம்முட்டிக்கு எழுதிக்கொடுத்துவிட்டார்" என பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.



Click it and Unblock the Notifications











