Mammootty: வாழ்த்து சொல்ல வந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மம்முட்டி - தீயாக பரவும் வீடியோ!
கொச்சி: நடிகர் மம்முட்டி மலையாள சினிமாவில் மாபெரும் அடையாளமாக இருந்தாலும் அவரை தென்னிந்திய சினிமாவின் அடையாளமாக மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவின் அடையாளமாகவே குறிப்பிடலாம். அதற்கு காரணம், இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றிய பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று சினிமாவில் அம்பேத்கரின் கதாபாத்திரத்தில் நடித்தார். உலகம் முழுவதும் அறியப்படும் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றில் அம்பேத்கர் கதாபாத்திரத்தில் நடித்த மம்மூட்டி இன்று அதாவது செப்டம்பர் 7ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இது மம்முட்டியின் 73வது பிறந்த நாள்.
கேரளாவில் வைக்கத்திற்குப் பக்கத்தில் 'செம்பு' என்ற கிராமத்தில் இஸ்மாயில் ஃபாத்திமா தம்பதியின் மகனாகப் பிறந்தவர்தான் மம்முட்டி. எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியிலும், எர்ணாகுளம் சட்டக் கல்லூரியிலும் படித்தவர். சினிமா நடிகனாக மிகவும் புகழ்பெற்ற மம்முட்டி மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான பிரம்மயுகம், கன்னூர் ஸ்குவாட் மற்றும் காதல் தி கோர் ஆகிய படங்கள் மெகா ஹிட் அடித்தது.

மம்முட்டி 1979-ல் வெளியான வில்கானுண்டு சொப்னங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார். அதாவது கனவுகள் விற்பனைக்கு இருக்கிறது என்பதுதான் அந்தப் படத்தின் தலைப்பின் தமிழாக்கம். சிறந்த நடிகருக்கான விருதினை தேசிய அளவில் மூன்று முறையும் மாநில அளவில் 20க்கும் மேற்பட்ட முறையும் பெற்றிருக்கிறார். இந்தியாவின் மிக உயரிய விருதாகிய பத்மஸ்ரீ பட்டம் பெற்ற நடிகர் மம்முட்டி.
என்.ஜி.ஓ: நடிகராக மட்டும் இல்லாமல் தனது பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கி சிறப்பாக நடத்தி வருகின்றார். அண்மையில் வயநாடு பகுதி முழுவதும் நிலச்சரிவினால் பெரும் அழிவைச் சந்தித்தபோது, இவரது தன்னார்வ தொண்டு நிறுவனம் அரசுடன் நின்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தது. மலையாளத்தில் கர்வம் இல்லாத நடிகர் என்றால் அதில் மம்முட்டியின் பெயரைக் குறிப்பிடலாம். அதற்கு காரணம், எந்த கதாபாத்திரம் என்றாலும் அவர் நடிப்பார். ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருவராகவும் நடிப்பார். ஆனால் இதே மனநிலை மற்ற நடிகர்களிடம் இவர் சினிமாவில் வளர்ந்து வந்த காலத்தில் இருந்ததா என்றால் கேள்விக்குறிதான்.
எழுத்தாளர்: அதேபோல் மம்முட்டி காழ்ச்சப்பாடு என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் தனது வாழ்வனுபவங்களை எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் தமிழில் "மூன்றாம்பிறை வாழ்வனுபவங்கள் " என்ற பெயரில் கே.வி. ஷைலஜா என்பவரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்திற்கு மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போதும் இந்த புத்தகம் விற்பனையில் உள்ளது.
வீடியோ கால்: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் மம்முட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற அவரது ரசிகர்கள் கொச்சில் உள்ள மம்முட்டியின் வீட்டின் முன்னால் நள்ளிரவு 12 மணிக்கே கூடினர். ஆனால் மம்முட்டி சென்னையில் இருப்பதால், ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. ஆனால் அதேநேரத்தில் தனது ரசிகர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது என்பதால், உடனே ரசிகர்களுக்கு வீடியோ காலில் நன்றி கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் உலா வருகின்றது.


Click it and Unblock the Notifications











