என் மகனை கடத்திட்டாங்களோன்னு நினைச்சேன்..வெளிநாட்டில் சிக்கிய ஹீரோ.. மகன் பற்றிய கவலையில் அம்மா!
திருவனந்தபுரம்: என் மகன் பிருத்விராஜை யாரோ கடத்திவிட்டார்கள் என்று நினைத்தேன் என்று அவர் அம்மா மல்லிகா தெரிவித்துள்ளார்.
தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்தவர், மலையாள நடிகர் பிருத்விராஜ்.
தமிழ், மலையாளம் மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார்.

சூப்பர் ஹிட்
இவர் நடித்து சமீபத்தில் வெளியான மலையாள படம், அய்யப்பனும் கோஷியும் சூப்பர் ஹிட்டானது. இந்தப் படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கிறது. இந்நிலையில் ஹீரோவாக நடித்து வந்த பிருத்விராஜ், இயக்குனர் ஆன படம், லூசிஃபர். மோகன்லால் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதில் மஞ்சு வாரியர், விவேக் ஓபராய் உட்பட பலர் நடித்திருந்தனர்.

ஆடுஜீவிதம்
இந்தப் படமும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் ஆக இருக்கிறது. இந்நிலையில் அவர் ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். எழுத்தாளர் பென்யாமின் இதே பெயரில் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் இது. இந்தப் படம் தனக்கு முக்கியமானது என்று பிருத்விராஜ் தெரிவித்திருந்தார். இதை பிளஸ்சி இயக்குகிறார்.

ஏ.ஆர்.ரகுமான் இசை
இதில் அமலா பால், அபர்ணா பாலமுரளி, வினித் ஶ்ரீனீவாசன், உட்பட பலர் நடிக்கின்றனர். கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜோர்டானில் நடந்தபோது லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் பிருத்விராஜ், பிளஸ்சி உட்பட 53 பேரை கொண்ட படக்குழு அங்கு சிக்கிக் கொண்டிருக்கிறது.

உருக்கமானப் பதிவு
அவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பிருத்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் உருக்கமானப் பதிவு ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்தார். அதில், 'ஒவ்வொரு நாளும் என் மகள் லாக்டவுன் முடிந்துவிட்டதா? அப்பா இன்னைக்கு வந்துவிடுவாரா? என்று கேட்கிறாள். ' என்று கூறியிருந்தார்.

இந்திரஜித்
இந்நிலையில் பிருத்விராஜின் அம்மா மல்லிகா சுகுமாரன், தன் மகன் குறித்து கவலை அடைந்துள்ளார். லாக்டவுன் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார் இவர். இவரது மற்றொரு மகன் நடிகர் இந்திரஜித், கொச்சியில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

கடத்தி விட்டார்கள்
இந்நிலையில் மகன் பிருத்வி ராஜ் பற்றி அவர் அம்மா மல்லிகா கூறும்போது 'ஒரு முறை டிவி செய்தியை கேட்டு என் மகன் பிருத்வி ராஜை யாரோ கடத்திவிட்டார்கள் என்று நினைத்து விட்டேன். தனியாக இருக்கும்போது, மனதில் இதுபோன்ற பயம் எழுவது அதிகமாகிறது. ஒரு தாய் தன் குழந்தைகளை பற்றிதான் எப்போதும் கவலைப்படுவாள். மகனிடம் பேச ஃபோன் சிக்னல் கிடைப்பதில்லை. சில நேரம் வாட்சப்களில் பேசிக்கொள்வோம்

மோகன்லால்
என் மகன் பற்றிய உண்மையை, மற்றவர்கள் மறைக்கிறார்களோ என்று கூட முதலில் நினைத்தேன். ஒரு முறை நடிகர் மோகன்லால் பேசும்போது என் பயத்தையும் நிலையையும் சொன்னேன். நாங்கள் அரைமணி நேரம் பேசினோம். அவர் என்னை ஆறுதல் படுத்தினார். சுரேஷ் கோபியும் என்னிடம் பேசினார். இருவரும் ஜோர்டானில் இருக்கும் அவர்களிடம் பேசி, எனக்குத் தகவல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

இந்திய தூதரகம்
ஒரு முறை மத்திய அமைச்சர் முரளிதரன் பேசினார். திருவில்லாவை சேர்ந்த அதிகாரி ஒருவர், ஜோர்டானில் உள்ள இந்திய தூதரகத்தில் வேலை பார்க்கிறார் என்றும் அவர்கள் பிருத்விராஜ் உள்ளிட்ட படக்குழுவை கவனித்துக்கொள்கிறார் என்றும் கூறினார். அவர்களுடன் மருத்துவக் குழுவும் இருப்பதால் பயப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்' என்று கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











