என் கலையும் கடமையும்.. விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ்!
சென்னை: பேய் மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் அமைச்சர் உதயநிதியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டதால் எழுந்த விமர்சனத்திற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இரண்டு தினங்களுக்கு முன் விடிய விடிய பேய் மழை கொட்டித் தீர்த்தது.
தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதி: வரலாறு காணாத மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளம் பாதித்த நெல்லை மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் மீட்புப்பணிகளில் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும், மீட்பு நடவடிக்கைகளையும் செய்யுமாறு அறிவுறுத்தி வருகிறார். அவர்களுடன் இயக்குநர் மாரி செல்வராஜும் செவ்வாய்க்கிழமை முதல் மீட்பு பணியில் ஈடுபட்டார்.
மக்கள் எதிர்பார்க்கவில்லை: இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் யாரும் இவ்வளவு பெரிய பாதிப்பை எதிர்பார்க்கவில்லை. ஆடுகள், மாடுகள், உடமைகளை உள்ளிட்டவற்றை விட்டு எங்கு செல்வது என்று தெரியாமல் பெரும் வெள்ளத்தில் மக்கள் சிக்கி விட்டார்கள். மழை பெய்ய வேண்டும் என்பதே மக்கள் ஆசை. அதற்காகதான் கோயில்களில் மக்கள் தொடர்ந்து வழிபாடு நடத்துவார்கள். ஆனால் இவ்வளவு பெரிய பாதிப்பை மக்கள் எதிர்ப்பார்க்கவில்லை.
மக்கள் மீட்க வேண்டும்: மேலும், ஊர்களை சுற்றி ஏராளமான குளங்கள், ஆறுகள் உள்ளன, அவற்றை தூர்வாரி முறையாக பாரமரிக்க வேண்டும் என்றும், ஆனால் அதைவிட முக்கியமான வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்கள் மீட்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரும் தொடர்பு கொள்ளமுடியாத நிலையில் இருக்கிறார்கள் என்று பேசி இருந்தார். மேலும், அமைச்சர் உதயநிதியுடன் மாரி செல்வராஜ் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது அமைச்சர் உடனான ஆய்வில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு என்ன வேலை? என்று சிலர் விமர்சித்து வந்தனர்.
மாரி செல்வராஜ் சரியான பதிலடி: இந்த விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில், என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல... நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











