20 வருஷம் ஒண்ணா வாழ்ந்துட்டு இப்படி பிரியலாமா?.. மம்மூட்டி - ஜோதிகாவின் பட கதை இதுதானா?
திருவனந்தபுரம்: தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை மலையாளத்தில் இயக்கி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் ஜோ பேபி. அவர் இயக்கத்தில், அடுத்ததாக மம்மூட்டி மற்றும் ஜோதிகா நடித்துள்ள காதல் தி கோர் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பலர் பல ஆண்டுகள் வாழ்ந்த பின்னரும் திடீரென ஒரு கட்டத்தில் மனமுடைந்து திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்கின்றனர்.

அப்படியொரு கதையை படமாக இயக்கி உள்ளார் இயக்குநர் ஜோ பேபி. மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ள ஜோதிகா ஆரம்பமே இப்படியொரு கதையில் நடித்து கவனிக்க வைத்து விடுவார் என்றே தெரிகிறது.
70 வயது நடிகருக்கு ஜோடி: நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக் கொண்டு பல ஆண்டுகள் சினிமாவில் இருந்தே விலகி இருந்த தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்த ஜோதிகா, மீண்டும் 36 வயதினிலே படத்தின் மூலம் தனது 2வது இன்னிங்ஸை சினிமாவில் தொடங்கினார். அந்த படம் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த How Old Are You படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மலையாள படங்கள் மீது கவனம் செலுத்தி வந்த ஜோதிகா மலையாள திரையுலகின் மூத்த நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக காதல் தி கோர் படத்தில் நடித்துள்ளார்.
விவாகரத்து கதைகள்: திரையுலகிலேயே தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சமந்தா - நாக சைதன்யா, அமீர் கான் விவாகரத்து என ஏகப்பட்ட விவாகரத்து கதைகள் அதிர்ச்சியை கொடுத்து வரும் நிலையில், சினிமாவிலும் தி கிரேட் இந்தியன் கிச்சன், ஜன கண மண, இறுகப்பற்று என வரிசையாக பல படங்கள் விவாகரத்து பற்றிய கதைகளாக வெளியாகி வருகின்றன.
20 வருஷம் கழித்து விவாகரத்து: மம்மூட்டிக்கும் ஜோதிகாவுக்கும் அந்த படத்தில் திருமணமாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில், அரசியல் ஆசை காரணமாக மம்மூட்டி எடுத்த முடிவுக்கு எதிராக அவரது மனைவி ஜோதிகா பிரிய முடிவு செய்வதாகவும் அவர்களின் மகன் மற்றும் மகள் அதனால் அடையும் மன உளைச்சல் உள்ளிட்ட விவகாரங்களை படமாக இயக்கி உள்ளார் ஜோ பேபி. வரும் நவம்பர் 23ம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாகிறது. கிம் கர்தாஷியன் தனது 3வது கணவர் கன்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்ய காரணமாக அரசியல் ஆசை இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











