Mammootty: "மம்முட்டி மாதிரி ராஜவாழ்க்கை யாரும் வாழ முடியாது.." இதுவரை வெளிவராத ரகசியம்!
சென்னை: மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியின் காதல் தி கோர் திரைப்படம் இன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற காதல் தி கோர், தற்போது ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், மம்முட்டி குறித்து ஒளிப்பதிவாளர் பன்னீர்செல்வம் பேசியது வைரலாகி வருகிறது.
மம்முட்டியின் ராஜவாழ்க்கை ரகசியம்: மலையாளத்தில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார் மம்முட்டி. 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மம்முட்டி, 3 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். கடந்தாண்டு மட்டும் நண்பகல் நேரத்து மயக்கம், கண்ணூர் ஸ்குவாட், காதல் தி கோர் என மூன்று சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகின. இதில் காதல் தி கோர் திரைப்படம் இன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.

திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி ரசிகர்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது காதல் தி கோர். அதேபோல் மம்முட்டி நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள பிரம்மயுகம் படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், மம்முட்டி குறித்து ஒளிப்பதிவாளர் பன்னீர்செல்வம் பேசிய பேட்டி வைரலாகி வருகிறது. மம்முட்டி நடிப்பில் ஆர்கே செல்வமணி இயக்கிய மக்கள் ஆட்சி, அரசியல் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் பன்னீர்செல்வம்.
அப்போது மம்முட்டியுடன் பழகியது குறித்து மனம் திறந்துள்ள பன்னீர்செல்வம், அவர் தான் உண்மையான ராஜவாழ்க்கையை வாழ்ந்தவர் என்றுள்ளார். அதாவது மம்முட்டி எப்போதும் ரொம்பவே பெர்ஃபெக்ஷன் பார்ப்பார். ஷூட்டிங் ஸ்பாட் வரும் போதே என்ன சீன் எடுக்கப் போகிறோம் என்பதில் தெளிவாக இருப்பார். அவரை ஏமாற்றவே முடியாது, அப்படி சரியாக இல்லையென்றால் மம்முட்டியை யாராலும் சமாளிக்கவே முடியாது.
முதல் படமான மக்கள் ஆட்சி எடுக்கும் போது அடிக்கடி மம்முட்டியுடன் மோதல் வரும். ஆனால் இரண்டாவது படமான அரசியல் படப்பிடிப்பில் மம்முட்டி சாருடன் நெருங்கி பழகிவிட்டோம். அந்தப் படம் முடிந்ததும் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் துல்கர் சல்மானின் கால்ஷீட் கேட்டு போன் செய்தேன். துல்கர் சல்மான் வேற டிப்பார்ட்மென்ட் என நக்கலாக பதிலளித்த மம்முட்டி, அவரை சந்திக்கவும் ஏற்பாடு செய்து கொடுத்தார். ஆனால், தன்னால் சிபாரிசு செய்ய முடியாது என்பதையும் கண்டிப்பாக சொல்லிவிட்டார்.
அதேநேரம் மம்முட்டி சார் அப்போதே டெக்னிக்கலாக புதிய கேட்ஜெட்கள் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டினார். செல்போன்கள் பிரபலமாகும் முன்பே அவரிடம் எல்லாவிதமான கேட்ஜெட்களும் இருந்தன. மார்க்கெட்டுக்கு வரும் முன்பே அவருக்கு எல்லாம் கிடைத்துவிடும். கார்கள் முதல் அனைத்தும் லேட்டஸ்ட் வெர்ஷன் என்னவோ அது மம்முட்டி சாரிடம் இருக்கும். அப்படியொரு ராஜவாழ்க்கை வாழ்ந்தவர் அவர். அவரைப் போல வேறு யாரும் இருக்க வாய்ப்பே இல்லை என பன்னீர் செல்வம் கூறியது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











