Bramayugam Box Office: பிரம்மயுகம் ஃபயர் பத்திக்கிச்சு.. பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் மம்மூட்டி!
திருவனந்தபுரம்: மம்மூட்டி நடிப்பில் இந்த வாரம் வெளியான பிரமயுகம் திரைப்படம் டாக் ஆஃப் தி டவுன் ஆக மாறியுள்ளது. இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் வெளியான இந்த ஹாரர் திரைப்படத்தை இந்தியா முழுவதும் சினிமா ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். பான் இந்தியா படமாக பிரம்மயுகம் படம் வெளியாகி இருந்தால் முதல் நாளே 50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி இருக்கும் எனக் கூறுகின்றனர்.
மலையாளத்தில் மட்டும் வெளியாகியுள்ள மம்மூட்டி நடித்த இந்தத் திரைப்படம் அனைத்து சினிமா ரசிகர்களையும் குறிப்பாக ஹாரர் விரும்பிகளை ரொம்பவே கட்டிப் போட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குவியும் பாராட்டுகள்: ராகுல் சதாசிவன் இயக்கத்தில் முன்னதாக வெளியான பூத காலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அவர் சொன்ன கதை பிடித்து போய் மம்மூட்டி இதற்கு முன் நடிக்காத ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வெளியான பிரம்மயுகம் திரைப்படம் மலையாள ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மாஸ் காட்டி வருகிறது. நாடு முழுவதும் உள்ள சினிமா விமர்சகர்களும் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர்.
பிரமயுகம் பட்ஜெட்: மம்மூட்டி நடிப்பில் வெளியான இந்த படத்தின் பட்ஜெட் மம்மூட்டியின் சம்பளத்தையும் சேர்த்து 27 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மம்மூட்டியின் சம்பளம் மட்டும் இந்த படத்திற்கு 15 முதல் 20 கோடி ரூபாய் இருக்கும் என்கின்றனர். கருப்பு வெள்ளையில் உருவாகியிருந்த திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களை பயமுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
10 கோடியை நெருங்கும் பிரம்மயுகம்: மம்மூட்டி, அர்ஜுன் அசோகன், சித்தார்த், அமல்டா லிஸ் நடிப்பில் வெளியாகியுள்ள பிரம்மயுகம் திரைப்படம் மூன்று நாட்களில் இதுவரை 9.30 கோடி ரூபாய் வசூலை ஈட்டி இருப்பதாகவும் 10 கோடி ரூபாயை தாண்டி ஞாயிற்றுக்கிழமை அன்று 13 முதல் 15 கோடி ரூபாய் வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரீமேக் செய்ய போட்டி: மலையாள படங்கள் ஹிட் அடித்தால் தமிழ் முதல் இந்தி வரை பல தயாரிப்பாளர்கள் முண்டியடித்துக் கொண்டு ரீமேக் உரிமைகளை வாங்கி படங்களை உருவாக்க ஆரம்பித்து விடுவார்கள். மோகன்லால், சோபனா நடித்து வெளியான மணிச்சித்திரத்தாழ் திரைப்படம் தான் ஆப்தமித்ரா, சந்திரமுகியாக மாறியது. திரிஷ்யம் திரைப்படம் பாபநாசம் என தமிழிலும் திரிஷ்யம் என தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன. அதே போல இந்த படத்தை ரீமேக் செய்ய பலரும் போட்டி போட்டு வருகின்றனர். ஆனால், ரீமேக் செய்தாலும் மம்மூட்டி அளவுக்கு யாரும் மிரட்ட முடியாது என்றும் இந்த படத்தை முறையாக டப் செய்து பல மொழிகளில் வெளியிடலாம் என மலையாள ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொடர் வெற்றி: மோகன்லால் நடித்த மலைக்கோட்டை வாலிபன் படம் சரியாக ஓடாத நிலையில், அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. ஆனால், முதல் 3 நாட்களிலேயே 10 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ள மம்மூட்டி திரைப்படம் 50 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நண்பகல் நேரத்து மயக்கம், கன்னூர் ஸ்குவாட், காதல் தி கோர் என தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார் மம்மூட்டி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications