Bramayugam Box Office: பட்ஜெட்டை விட டபுள் மடங்கு லாபம்!.. 72 வயதிலும் மாஸ் காட்டும் மம்மூட்டி!
திருவனந்தபுரம்: மெகா ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி வெளியான பிரமயுகம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை 10 நாட்களில் நடத்தியிருக்கிறது. டைரக்டர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் வெளியான இந்த ஹாரர் திரைப்படத்தை இந்தியா முழுவதும் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மலையாளத்தில் வெற்றிப் பெற்ற இந்த படம் மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு கல்லா கட்டி வருகிறது.
கொடுமன் போட்டி கதாபாத்திரத்தில் மம்மூட்டி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியது தான் இந்த படம் இந்தளவுக்கு வெற்றி பெற காரணமே என்கின்றனர். தொடர்ந்து வசூலில் இந்த ஆண்டு வெளியாகும் மலையாள படங்கள் சக்கைப் போடு போட்டு வருகின்றன.

பிரமயுகம் கதை: இயக்குநர் ராகுல் சதாசிவன் பூத காலம் திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை மிரட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றார். அவர் சொன்ன கதை பிடித்து போய் மம்மூட்டி இதுவரை நடிக்காத ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வெளியான பிரம்மயுகம் திரைப்படம் மலையாள ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. கொடுமன் போட்டியின் வீட்டில் தவறுதலாக வந்து சிக்கிக் கொள்ளும் அர்ஜுன் அசோகன் அந்த வீட்டில் இருந்து தப்பித்தாரா? இல்லையா? என்பது தான் கதை. ஹாலிவுட்டில் வெளியான லைட் ஹவுஸ் படத்தின் காப்பி என்றும் இந்த படம் ட்ரோல் செய்யப்பட்டது.
பிரமயுகம் பட்ஜெட்: மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் படத்தின் பட்ஜெட் 27 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மம்மூட்டியின் சம்பளம் மட்டும் இந்த படத்திற்கு 15 முதல் 20 கோடி ரூபாய் இருக்கும் என்கின்றனர். கருப்பு வெள்ளையில் உருவாகியுள்ள இந்த படம் முதல் நாளில் இருந்தே வசூலில் அதிரடி காட்டி அசத்தி வந்த நிலையில், 10 நாட்களில் பட்ஜெட்டை விட டபுள் மடங்கு வசூல் செய்திருப்பதாக கூறுகின்றனர்.
50 கோடி பாக்ஸ் ஆபிஸ்: மம்மூட்டி, அர்ஜுன் அசோகன், சித்தார்த், அமல்டா லிஸ் நடிப்பில் வெளியாகியுள்ள பிரம்மயுகம் திரைப்படம் முதல் நாள் 3.30 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில், படிப்படியாக வசூல் அதிகரித்தது. படத்தின் காட்சிகளும் அதிகரித்த நிலையில், 10 நாட்களில் 50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சந்தோஷத்தில் மம்மூட்டி ரசிகர்கள்: மோகன்லால் நடித்த மலைக்கோட்டை வாலிபன் படம் இந்த ஆண்டு வெளியாகி சரியாக ஓடாத நிலையில், அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. ஆனால், மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரமயுகம் 50 கோடி வசூலை கடந்த நிலையில், எப்போதுமே மம்மூட்டி தான் டாப் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நண்பகல் நேரத்து மயக்கம், கன்னூர் ஸ்குவாட், காதல் தி கோர் என தொடர்ந்து 72 வயதிலும் பல வெற்றிப் படங்களை கொடுத்து மாஸ் காட்டி வருகிறார் மம்மூட்டி.
பெரிய போட்டி: ஒரு பக்கம் பிரமயுகம் படம் வசூல் ஈட்டி வரும் நிலையில், மலையாளத்திலேயே அந்த படத்திற்கு போட்டியாக அதற்கு முன்னதாக வெளியான பிரேமலு திரைப்படம் 100 கோடி வசூலை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படமும் எளிதில் 100 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மம்மூட்டியின் படமும் 100 கோடியை தொடுமா? என்கிற கேள்வியும் இந்த 3 படங்களின் வசூலே 300 கோடியை தொடும் நிலையில், கோலிவுட்டை ஈஸியாக இந்த ஆண்டு முதல் பாதியில் மலையாள திரையுலகம் வென்று விடும் நிலை உருவாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











