மோகன்லால் அளவுக்கு மாஸ் காட்டினாரா மம்மூட்டி.. பஸூக்கா, மரணமாஸ், ஆலப்புழா ஜிம்கானா வசூலில் யாரு டாப்?
திருவனந்தபுரம்: மலையாளத்தில் இந்த ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் திரைப்படம் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறியது. 250 கோடி வசூலை கடந்து மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் வசூலையே பின்னுக்குத்தள்ளியது. இந்நிலையில், மம்மூட்டி நடிப்பில் ஏப்ரல் 10ம் தேதி வெளியான பஸூக்கா திரைப்படம் எந்தளவுக்கு வசூல் செய்தது என்பது குறித்தும் அதற்கு போட்டியாக பிரேமலு ஹீரோ நஸ்லின் நடிப்பில் வெளியான ஆலப்புழா ஜிம்கானா மற்றும் பசில் ஜோசப் நடிப்பில் வெளியான மரண மாஸ் படங்கள் முதல் நாளில் அள்ளிய வசூல் குறித்த விவரங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க..

மலையாள திரையுலகில் இன்னமும் குறைந்த பட்ஜெட்டில் தான் படங்கள் உருவாகி வருகின்றன. மம்மூட்டி போன்ற பெரிய நடிகர்களின் படங்களே 20 கோடி ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில் தான் வெளியாகி வெற்றி பெறுகின்றன. தமிழில் தான் சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு உள்ளிட்ட நடிகர்களே 35 கோடிக்கும் மேல் சம்பளம் கேட்கின்றனர் என்கிற புலம்பல் தயாரிப்பாளர்கள் மத்தியில் உலாவி வருகின்றன.
மம்மூட்டி நடிப்பில் வெளியான பஸூக்கா படத்தில் கவுதம் மேனன், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நேற்று வெளியான படங்களில் அதிக வசூலை அந்த படம் தான் அள்ளியிருக்கிறது. ஆனால், மோகன்லாலின் எம்புரான் அளவுக்கு எல்லாம் வசூல் ஈட்ட வாய்ப்பே இல்லை என தெரிகிறது.
பஸூக்கா முதல் நாள் வசூல்: மம்மூட்டி நடிப்பில் வெளியான படங்களிலேயே முதல் நாள் அதிக வசூலை அள்ளிய படமென்றால் அது டர்போ படம் தான் எனக் கூறுகின்றனர். அதிகபட்சமாக அந்த படம் முதல் நாளில் 6.25 கோடி வசூல் செய்துள்ளது. அவருடைய 4வது பெரிய ஓபனர் படமாக பஸூக்கா மாறியுள்ளது. 3.30 கோடி வசூலை மம்மூட்டி படம் முதல் நாளில் அள்ளியிருக்கிறது. சிபிஐ வரிசை படங்களை போல இந்த படமும் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் வகையறா படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலப்புழா ஜிம்கானா முதல் நாள் வசூல்: பிரேமலு படத்தின் ஹீரோ நஸ்லின் புதிய கெட்டப்பில் பாக்ஸிங் வீரராக நடித்துள்ள ஆலப்புழா ஜிம்கானா திரைப்படமும் நேற்று வெளியாகி மலையாள ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. காலித் ரஹ்மான் இயக்கத்தில் வெளியான ஆலப்புழா ஜிம்கானா திரைப்படம் மம்மூட்டி படத்துடன் பாக்ஸ் ஆபீஸில் நல்லாவே போட்டிப் போட்டு முதல் நாளில் அதிகபட்சமாக 2.75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக Sacknilk வெப்சைட் தகவல் தெரிவித்துள்ளது.
மரணமாஸ்: வரிசையாக மலையாளத்தில் வருஷத்துக்கு 10 படம் ரிலீஸ் செய்வார் போல பசில் ஜோசப். தலையில் கலர் அடித்துக்கொண்டு அவர் நடித்துள்ள மரணமாஸ் திரைப்படமும் நேற்று மல்லுவுட்டில் மல்லுக்கட்டியது. ஆனால், இந்தமுறை ரசிகர்கள் அவரது படத்துக்கு பெரிய வரவேற்பை முதல் நாளில் கொடுக்கவில்லை. வெறும் 1.10 கோடி ரூபாய் வசூல் மட்டும் தான் அந்த படம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் நிலைமையே வேற: ஒட்டுமொத்தமாக நேற்று வெளியான 3 மலையாளப் படங்களின் வசூலையும் சேர்த்தால் கூட அஜித் குமாரின் குட் பேட் அக்லி தமிழ்நாட்டில் செய்த வசூல் சாதனைக்கு ஈடாகாது என்கின்றனர். அதிகபட்சமாக குட் பேட் அக்லி திரைப்படம் 28.50 கோடி ரூபாய் வசூலை இந்தியளவில் முதல் நாளில் அள்ளியிருப்பதாக sacknilk இணையதளம் தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பை மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











