Leo - காபியால் லியோவுக்கு வந்த பிரச்னை?.. லியோ காபி நிறுவனத்தின் குற்றச்சாட்டு இதுவா?
சென்னை: லியோ என்ற பெயரை வைக்கும்போது தங்களிடம் அனுமதி கேட்கவில்லை என லியோ காபி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குற்றஞ்சாட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். வாரிசு கொடுத்த சூட்டை இதில் தணித்துக்கொள்ள அவர் முனைந்திருப்பதாலும், மாஸ்டர், விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் இயக்குவதாலும் லியோ நிச்சயம் மெகா ஹிட்டாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். மேலும் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் லோகேஷ் கனகராஜ் பார்த்து பார்த்து செதுக்கிவருவதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.
எக்கச்சக்க கேள்விகள்: லியோ படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து அந்தப் படத்தின் கதை என்ன, அது எல்சியூ எனப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வருமா போன்ற எக்கச்சக்க கேள்விகளை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர். ஆனால் அதுகுறித்து எந்தவிதமான தகவலையும் கசியவிடாமல் படக்குழு பாதுகாத்துவருகிறது. இந்தச் சூழலில் முதல் சிங்கிளுக்கான அறிவிப்பு போஸ்டரில் ஆல்டர் ஈகோ என்ற வார்த்தை கவனம் ஈர்த்துள்ளது.

அடையாளத்தை மறைக்கும் விஜய்: ஏற்கனவே லியோ படத்தின் கதை குறித்து ஒரு தகவல் வெளியாகியிருந்தது. அதாவது ஒரு சம்பவத்தை செய்துவிட்டு வேறு ஒரு நபராக காஷ்மீரில் விஜய் வாழ்வார். அவரது இருப்பிடத்தை தெரிந்துகொண்டு எதிரிகள் அங்கு வருவார்கள் என கூறப்பட்டது. இப்போது ஆல்டர் ஈகோ என்ற வார்த்தை அதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறதென்று கூறுகிறார்கள் ரசிகர்கள். ஏனெனில் ஆல்டர் ஈகோ என்றால் ஒரு விஷயத்தை செய்துவிட்டு தன்னுடைய அடையாளங்களை மறைத்து இன்னொருவராக வாழ்வது என்று அர்த்தம்.
முதல் சிங்கிள்: இதற்கிடையே திரைப்படத்தில் சஞ்சய் தத்தான் விஜய்க்கு தந்தை, அர்ஜுன் விஜய்க்கு சகோதரர். இதில் மூன்று பேருமே கேங்ஸ்டர்தான் என கூறப்படுகிறது. இருப்பினும் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி படத்தின் முதல் சிங்கிளான நா ரெடி என்ற பாடல் வெளியாகவிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எல்சியூ: நேற்று பாடலுக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டது. அதில் தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா என்று ஒரு வரி வருவதை பார்த்த ரசிகர்கள், தேளை உடலில் பச்சை குத்திக்கொண்ட ரோலக்ஸையும், அவர் கேங்கையும்தான் தன்னை சீண்ட வேண்டாம் என விஜய் எச்சரிக்கிறார். எனவே லியோ படம் எல்சியூவில் இணைவது உறுதி என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஏனெனில் லியோ என்றால் சிங்கம் என ஒரு அர்த்தம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
லியோ மீது குற்றச்சாட்டு: இந்நிலையில் லியோ படத்துக்கு புதிய சிக்கல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி லியோ காபி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வேணு சீனிவாசன் என்பவர், 'லியோ பெயருக்கான காப்புரிமை எங்களிடம் இருக்கிறது. ஆனால் படத்துக்கு லியோ என்ற பெயரை வைக்கும்போது எங்களிடம் அனுமதி கேட்கவில்லை என குற்றஞ்சாட்டியிருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தகவலால் படத்துக்கு ஏதேனும் சிக்கல் வந்துவிடுமோ என்ற அச்சமும் ரசிகரக்ளிடம் எழுந்துள்ளது. அதேசமயம் லியோ என்பது அந்த நிறுவனத்துக்கு மட்டுமே சொந்தம் இல்லை எனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











