மும்முரமடையும் கமலின் தக் லைஃப் வேலைகள்.. மணிரத்னம் எப்போ ஷூட்டிங்கை முடிக்கிறார் தெரியுமா?
சென்னை: விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனையடுத்து உற்சாகமடைந்த அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதும், படங்களை தயாரிப்பதும் என பிஸியாக இருக்கிறார். தற்போது அவர் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்ததன் காரணமாக தக் லைஃப் மீது உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார் கமல்.
கமல் ஹாசன் தனது சினிமா பயணத்தின் இரண்டாவது இன்னிங்ஸை விக்ரம் படத்தில் ஆரம்பித்தார்.. லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்தப் படத்தின் மூலம் தரமான வெற்றியை பதிவு செய்தார். அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டானார். அதன்படி கடைசியாக அவரது நடிப்பில் இந்தியன் 2 படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரிலீஸான அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இப்போது மணிரத்னம் இயக்கியிருக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

கமல் - மணிரத்னம்: கமல் ஹாசனும் மணிரத்னமும் இணைந்து ஏற்கனவே நாயகன் என்ற கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் இன்றுவரை சிறந்த அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
ஷூட்டிங் அப்டேட்: இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர். ஏற்கனவே மன்மதன் அன்பு, தூங்கா வனம் ஆகிய படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் திரிஷா. இதனையடுத்து தற்போது மூன்றாவது முறையாக கமலுடன் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி செர்பியா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்தது.
தக் லைஃப்பில் சிம்பு: இதற்கிடையே படத்தில் கமிட்டாகியிருந்த துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்டோர் படத்திலிருந்து வெளியேறிவிட்டார்கள். அதேசமயம் சிம்பு இந்தப் படத்தில் இணைந்தார். அவர் தொடர்பான கேரக்டர் இண்ட்ரோ வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தனக்கான டப்பிங் போர்ஷனையும் சிம்பு முடித்துவிட்டார். மேலும் சிம்பு பல காட்சிகளை சிங்கிள் டேக்கிலேயே முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. நிச்சயம் இந்தப் படத்தின் தூண்களில் ஒருவராக சிம்பு இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
மணிரத்னம் போட்டிருக்கும் பிளான்: இந்நிலையில் தக் லைஃப் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இன்னும் கொஞ்சம் மட்டுமே ஷூட்டிங் செய்ய வேண்டியிருப்பதாகவும்; எனவே அதனை செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் முடித்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தொடங்க மணிரத்னம் பிளான் போட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக இதுவரை எடுக்கப்பட்ட படத்தின் காட்சிகளை பார்த்து கமல் ஹாசனுக்கு ஆத்ம திருப்தி ஏற்பட்டதாகவும்; மணிரத்னத்தையும், சிம்புவையும் வெகுவாக பாராட்டியதாகவும் ஒரு தகவல் ஓடியது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











