மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங் எப்போது? லொகேஷனை அந்த நாட்டுக்கு மாத்திட்டாங்களாமே?
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் லொகேஷனை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
Recommended Video
'பொன்னியின் செல்வன்' நாவலை பிரமாண்ட படமாக எடுத்து வருகிறார் மணிரத்னம்.
கல்கியின் புகழ்பெற்ற இந்த நாவலை பலர் படமாக்க முயற்சித்தும் முடியவில்லை. இதையடுத்து மணிரத்னம் இப்போது இயக்கி வருகிறார்.

ஐஸ்வர்யா ராய்
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. இரண்டு பாகமாக உருவாகும் இந்தப் படத்தில், விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லால் உள்பட பல நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இளங்கோ கிருஷ்ணன் பாடல்கள் எழுதுகிறார்.

குந்தவையாக த்ரிஷா
இதில் ஐஸ்வர்யா ராய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். நந்தினியாகவும் மந்தாகினி தேவியாகவும் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஐஸ்வர்யா லட்சுமி, பூங்குழலி கேரக்டரில் நடிக்கிறார். ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம் நடிக்கின்றனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

பாலாஜி சக்திவேல்
இதற்கிடையே இதில் புதிதாக நடிகர் நிழல்கள் ரவியும் இயக்குனர் பாலாஜி சக்திவேலும் இணைந்துள்ளனர். முக்கிய வேடங்களில் நடிக்க இருக்கின்றனர். இவர்கள் வேறு இரண்டு நடிகர்களுக்கு பதிலாக இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுபற்றி படக்குழு ஏதும் தெரிவிக்கவில்லை.

லாக்டவுன் காரணமாக
இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்தது. அடுத்து ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியிலும் புதுச்சேரியிலும் செட் அமைத்து படமாக்கப்பட்டது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு, கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது.

லொகேஷன் மாற்றம்
மத்திய பிரதேச மாநிலத்தில் இதன் ஷூட்டிங் நடத்தப்பட இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், இப்போது லொகேஷனை மாற்றி இருக்கிறார்களாம். இதன் ஷூட்டிங் இலங்கையில் நடக்க இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதற்கான அனுமதிக்கான வேலைகளில் படக்குழு இறங்கி இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











