வடிவேலுவை வைத்து குப்பை படம் எடுத்தேன்.. ஸ்ரேயாவை தப்பா யூஸ் பண்ணாங்க.. தயாரிப்பாளர் ஓபன் டாக்
சென்னை: வைகை புயல் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் வடிவேலு. தன்னை தாழ்த்திக்கொண்டு பிறரை சிரிக்க வைத்து தன்னை உயர்த்திக்கொண்டவர் அவர். இடையில் சில பிரச்னைகளால் அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பிறகு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்த அவர்; மாமன்னன் படத்தில் பயங்கரமாக ஸ்கோர் செய்தார். அடுத்ததாக அவர் நடிப்பில் மாரீசன் படம் வெளியாகவிருக்கிறது. மேலும் சுந்தர்.சி இயக்கத்திலும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
வடிவேலு ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர். முதல் படத்திலேயே தனது வெள்ளந்தியான நடிப்பு, வித்தியாசமான உடல் மொழியால் தனி முத்திரை பதித்தார். பிறகு கவுண்டமணி, செந்தில் காமெடிகளில் நடித்தார் வடிவேலு. ஒருகட்டத்தில் கவுண்டமணிக்கும், செந்திலுக்கும் வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து வடிவேலுவுக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. வடிவேலுவும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு மிகப்பெரிய அளவில் முன்னேறினார்.

வலிக்கு மருந்து: வடிவேலு தனது காமெடியில் பிறரை உருவ கேலி செய்யாமல் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு காமெடி செய்தார். அது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக வடிவேலு இல்லாத படங்களே இல்லை என்ற நிலைமை உருவானது. ரஜினியே கூட சந்திரமுகி படத்தில் வடிவேலு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டு. அதேபோல் வடிவேலு விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு என பலருடன் நடித்து அதகளம் செய்திருக்கிறார்.
பிரச்னைகள்: ஒருகட்டத்தில் ஹீரோவாக அறிமுகமான வடிவேலு இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தை மெகா ஹிட்டாக கொடுத்தார். ஆனால் அதற்கடுத்து அவர் ஹீரோவாக நடித்த படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. சூழல் இப்படி இருக்க அவருக்கும் விஜயகாந்த்துக்கும் முட்டிக்கொண்டது. எனவே அவரை எதிர்க்கிறேன் என்கிற பெயரில் தேமுதிக - அதிமுக கூட்டணியை 2011ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் விமர்சனம் செய்தார். இதனையடுத்து வடிவேலுவுக்கு பிரச்னைகள் ஆரம்பித்தன.
வடிவேலுவின் செகண்ட் இன்னிங்ஸ்: அதன்படி வடிவேலுவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் குறைந்து ஒருகட்டத்தில் வாய்ப்பே இல்லாமல் போனது. மேலும் அவருக்கு ரெட் கார்டும் போடப்பட்டிருந்தது. ஒருவழியாக அவருக்கான பிரச்னைகள் எல்லாம் முடிந்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார் அவர். அதனையடுத்து அவர் நடித்த மாமன்னன் திரைப்படம் அவருக்கு சிறந்த பெயரை பெற்று தந்தது. இப்போது மாரீசன் படத்திலும், சுந்தர். சி இயக்கத்தில் கேங்கர்ஸ் என்ற படத்திலும் நடிக்கிறார்.
மாணிக்கம் நாராயணன் பேட்டி: இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், "வடிவேலுவை வைத்து இந்திரலோகத்தில் நா.அழகப்பன் என்ற படத்தை தயாரித்தேன். தம்பி ராமையா இயக்கியிருந்தார். அது ஒரு குப்பைப் படம் என்பதை நானே ஒத்துக்கொள்கிறேன். படத்தில் வெறும் சத்தம் மட்டும்தான் இருந்தது. காமெடியெல்லாம் எதுவுமே இல்லை. படத்தை பார்த்துவிட்டு என்ன படம் எடுத்து வெச்சிருக்கீங்க என்று அவர்களை அறைய போய்விட்டேன்.
அதேபோல் ஸ்ரேயாவை அந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வைத்தோம். டீசண்ட்டான சம்பளம்தான் வழங்கினோம். ஆனால் அந்தப் படத்தில் அவரையும் தப்பாக யூஸ் பண்ணிவிட்டார்கள். இப்படி எல்லாமே அந்தப் படத்தில் சொதப்பிவிட்டது. தம்பி ராமையாவுக்கு படம் எடுக்க தெரியவில்லை. ஒரு தவறை ஒருவன் உணர்ந்தால்தான் அவனால் முன்னேற முடியும். வடிவேலு அந்தத் தவறை உணராமல் இருந்ததால்தான் அவரால் இடையில் சில காலம் நடிக்க முடியவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











