சொந்தங்கள் முன்னிலையில்.. லாக்டவுனில் எளிமையாகத் திருமணம் செய்துகொண்ட நடிகர்.. ரசிகர்கள் வாழ்த்து!
கொச்சி: பிரபல நடிகர், லாக்டவுன் காரணமாக தனது திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்துள்ளார்.
ரஜினியின் பேட்ட படத்தில் நடித்தவர் மணிகண்டன் ஆச்சாரி. மலையாளத்தில் வெளியான கம்மாட்டிபாடம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இவர்.
சிப்பி, மம்மூட்டியின் மாமாங்கம் உட்பட பல படங்களில் நடித்துள்ள மணிகண்டன், தமிழில் விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்திலும் நடித்துள்ளார்.

கொரோனா
இவருக்கும் அஞ்சலி என்பவருக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது. திருமணத் தேதியும் குறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இருந்தும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.

லாக்டவுன்
கேரளாவில் நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டாலும் மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இது அதிகரித்து வருகிறது. இதனால் மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள, லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு சில மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. நீட்டித்தால்தான் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எளிமையாக
இந்த கொரோனா காரணமாக, பலர் தங்கள் திருமண திட்டங்களை தள்ளி வைத்தனர். மலையாள நடிகை உத்ரா உண்ணி தன் திருமணத்தை எளிமையாக நடத்த இருப்பதாக அறிவித்தார். தெலுங்கு நடிகர் நிதின் திருமணத்தைத் தள்ளி வைத்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் ஆச்சாரியும் தனது பிரமாண்ட திருமணத் திட்டத்தை மாற்றினார். எளிமையாக நடத்த முடிவு செய்தார்.

பகவதி கோயிலில்
அதன்படி எரூரில் உள்ள அய்யம்பில்லிக்காவு பகவதி கோயிலில் இவர்கள் திருமணம் இன்று காலை நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். தங்கள் திருமண வரவேற்புக்கான செலவுக்கு வைத்திருந்த பணத்தை, முதல்வர் நிவாரண நிதிக்கு மணிகண்டன் ஏற்கனவே வழங்கியிருந்தார். இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ரசிகர்கள்
முன்னதாக, தனது பேஸ்புக்கில், 'எனது திருமணம் எளிமையாக நடக்க இருக்கிறது. உங்கள் வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் எதிர்பார்க்கிறேன்' என்று கூறியிருந்தார், மணிகண்டன் ஆச்சாரி. இதற்கு ஏராளமான ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை கமென்ட்களில் தெரிவித்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











