Kudumbasthan box office: மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: விக்ரம் வேதா, காலா ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்த மணிகண்டன், ஜெய் பீம் படத்தின் மூலம் சிறந்த நடிகர் என அனைவராலும் பாராட்டப்பட்டார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து குட் நைட், லவ்வர் என தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் மணிகண்டன் நேற்று வெளியான குடும்பஸ்தன் படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி இருக்கும் இந்த படத்தில், குரு சோமசுந்தரம்,சான்வி மேகனா,சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
வழக்கமாக நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் மணிகண்டன், இந்த முறையும் நல்ல கதையை தேர்வு செய்து நடித்து இருக்கிறார். வேறு ஒரு ஜாதியை சேர்ந்த கதாநாயகியான சான்வி மேனாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் ஹீரோ மணிகண்டன். நடுத்தர வர்க்கத்து குடும்பத்தை சேர்ந்த மணிகண்டன் ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். மணிகண்டனின் அக்காவாக நடித்திருக்கிறார் நிவேதிதா ராஜப்பனும் அவரின் கணவராக சோம சுந்தரமும் நடித்திருக்கிறார். சோம சுந்தரம் பெரிய கம்பேனியில் வேலை பார்ப்பதால், நல்ல சம்பளத்தை வாங்குவதால், அவருக்கு குடும்பத்தில் நல்ல மரியாதை, ஆனால் வேறு ஒரு ஜாதியை சேர்ந்த நாயகனுக்கு அந்த வீட்டில் மரியாதையே இல்லை.

குடும்பஸ்தன் படத்தின் கதை: இந்த நேரத்தில் தான் அலுவலகத்தில் ஏற்படும் ஒரு ஈகோ பிரச்சனையால் மணிகண்டனுக்கு வேலை போய்விடுகிறது. அந்த விஷயத்தை வீட்டுக்கு தெரியாமல் மறைத்து வைத்து, வட்டிக்கு பணம் வாங்கி சம்பளமாக கொடுத்து வருகிறார். இந்த விஷயம் தெரிந்த சோம சுந்தரம், இதுதான் அவமானப்படுத்த சரியான நேரம் என்று, மணிகண்டனுக்கு வேலை போன விஷயத்தை வீட்டில் சொல்ல, பிரச்சனை வெடிக்கிறது. இதனால், மணிகண்டனும் அவரது மனைவியும் அசிங்கப்படுகின்றனர். இதிலிருந்து மணிகண்டன் மீள என்ன செய்தார் என்பது தான் குடும்பஸ்தன் படத்தின் கதை.
எதார்த்தமான நடிப்பு: வழக்கமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வரும் மணிகண்டன், இந்த முறையும் குடும்பஸ்த்தன் என்ற நல்ல கதை அம்சம் உள்ள கதையை தேர்ந்தெடுத்து நடித்து இருக்கிறார். முந்தைய படங்களில் இல்லாத வேறு ஒரு பரிமாணத்தை மணிகண்டன் இதில் காட்டியிருக்கிறார். அதேபோல நடுத்தர வர்க்கத்தில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது. தினம் தினம் அவர்களின் குடும்பத்தில் பணத்திற்காக என்னென்ன பிரச்சனைகள் நடக்கிறது என்பதை அழகாக காட்டியிருக்கிறார் இயக்குனர். வழக்கம்போல மணிகண்டன் படத்தில் என்ன விதமான சுவாரஸ்யம் இருக்குமோ அதேபோல இந்த படத்தில் காமெடி, சென்டிமெண்ட் என படம் போரடிக்காமல் இருப்பதாக படம் பார்த்தவர்கள் படத்திற்கு நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர்.
முதல் நாள் வசூல்: குடும்பஸ்தன் படத்திற்கு மக்களிடமிருந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் முதல் நாள் வசூல் ஒரு கோடியை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இனிவரும் நாட்களில் விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











