twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருடா திருடாவை மறக்க முடியுமா ?

    By Shankar
    |

    Recommended Video

    திருடா திருடாவை மறக்க முடியுமா ?

    - கவிஞர் மகுடேசுவரன்

    ஒவ்வொரு திரைப்படச் சுவைஞரும் மணிரத்தினத்தின் படங்களுக்குச் சிறப்பான இடத்தைத் தருவார். பெரும்போக்காகச் சென்றுகொண்டிருந்த திரைப்பட மொழியை மெல்ல மெல்ல காட்சி மொழியாக உருமாற்றிய தென்னிந்திய இயக்குநர் அவர். தம் முதற் படத்திலேயே மூக்கின்மேல் விரலை வைக்கும் வித்தையைச் செய்துகாட்டாமல் படிப்படியாக வியக்க வைத்தவர்.

    Manirathnam's unforgettable classic Thiruda Thiruda

    மணிரத்தினத்தின் மீதான பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டமைக்கப்பட்டது. அவருடைய ஒவ்வொரு படத்தின் பின்னும் சீரான வளர்ச்சியைப் பெற்றது. பகல்நிலவு, இதயக்கோவில் ஆகிய படங்களில் அவர் பிற்காலத்தில் தவிர்க்க முடியாத இயக்குநராக இனங்காணப்படுவார் என்பதற்கான எந்தத் தடயத்தையும் காண முடியவில்லை.

    இன்னும் சொல்லப்போனால் இதயக்கோவில் திரைப்படத்தில் கவுண்டமணியைக்கொண்டு நகைச்சுவைத் தனிக்கதையையும் எடுத்து வைத்திருப்பார். அக்னி நட்சத்திரத்திலும் இதயத்தைத் திருடாதே திரைப்படத்திலும் தனி நகைச்சுவை அத்தியாயங்கள் உள்ளன. அவற்றுக்கும் கதைப்போக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. "என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா...," என்று ஜனகராஜ் கத்துகின்ற காட்சிக்கும் அக்னி நட்சத்திரத்தின் கௌதம் அசோக் மோதல்களுக்கும் என்ன தொடர்பு ? "லட்சுமிபதி... முதலாளி..." என்று ஜனகராஜும் விகே இராமசாமியும் உரையாடுகின்ற காட்சிகளுக்கும் ஒரே தந்தையின் வழியாய் இருவேறு தாயார்க்குப் பிறந்த நாயகர்களின் முரண்காட்சிகளுக்கும் ஏதேனும் இணைப்பு உண்டா ? இல்லவே இல்லை.

    Manirathnam's unforgettable classic Thiruda Thiruda

    திரைப்படத்தின் வணிக வெற்றிக்காகப் போதியவாறு இணங்கிச் சென்றவர்தான் மணிரத்தினமும். ஆனால், அடுத்தடுத்த படங்களில் அவர் அத்தகைய உத்திகளைக் கைவிட்டுவிட்டு முழுமையான தரமான படமாக்கங்களின்மீது பற்றுடையவர் ஆனார். அதே நேரத்தில் மணிரத்தினத்தின் படங்களில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் எளிமையாக இருந்தாலும் பிற்பாடு எண்ணிச் சிரிக்குமாறு இருந்திருக்கின்றன. "போடா டேய்... மடையா... உட்காருடா சோமாறி," என்று டில்லி சிங்குக்குத் தப்பும் தவறுமாகத் தமிழ் சொல்லிக்கொடுக்கும் மௌனராகம் திவ்யாவின் நகைச்சுவைக் காட்சி அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இன்றைக்கும் அந்தச் சிங்கின் உச்சரிப்பில் கூறப்படும் "போடா டேய்..." காதுக்குள் ஒலிப்பதை உணர்கிறேன்.

    மணிரத்தினத்தின் பெரும்பான்மையான படங்களும் பார்வையாளர்களின் உணர்வழுத்தங்களைத் தூண்டி விடுபவை. இதயத்தைத் திருடாதே பார்த்த என்னால் அடுத்த நான்கைந்து நாள்களுக்கு மனத்தின் இறுக்கத்தைத் தளர்த்த முடியவில்லை. வழக்கமாகச் சிரிக்கவும் பேசவும் இயல்பு நிலைக்குத் திரும்பவும் போதிய நாள்கள் தேவைப்பட்டன. இருட்டும் சோகமும் அவருடைய படங்களில் தவறாது இடம்பெற்றன.

    Manirathnam's unforgettable classic Thiruda Thiruda

    இவற்றுக்கு நடுவில் ஒரேயொரு திரைப்படத்தை மட்டும் அவர் தொடக்கம் முதற்றே இறுதி வரை இலகுவான திரைமொழியில் எடுத்திருக்கிறார். ஸ்பீல்பெர்க்கின் இந்தியானா ஜோன்ஸ் வகையிலான ஒரு திரைப்படமாவது தமிழில் வந்திருக்கிறதா என்றால் அந்தத் திரைப்படத்தைத்தான் கூறவேண்டும். திருடா திருடா என்னும் படம்தான் அது.

    மணிரத்தினத்தின் திரைப்படத்திற்குச் சென்று, இளிப்பு மாறாத முகத்துடன் எவ்வகை மனச்சுமைக்கும் ஆட்படாமல் பார்த்துவிட்டு வந்தேன் என்றால் அது திருடா திருடா தான். ரோஜா திரைப்படத்திற்கு அடுத்து வந்த அப்படம் ஒரு காட்சியின்ப விருந்து என்றால் மிகையில்லை. ஒரு திரைப்படம் என்பது கண்கொள்ளாக் காட்சிச் சட்டகத்தின் தொகுப்பு என்பதை அப்படத்தின் ஒவ்வொரு சுடுவும் (Shot) உறுதிப்படுத்தும். திரைப்படச் சுருள்களில் பதிவாக்கப்பட்ட திருடா திருடாவின் பன்னிற அழுத்தங்கள் நினைவை விட்டு அகலமாட்டாதவை.

    Manirathnam's unforgettable classic Thiruda Thiruda

    இன்றைக்கு அத்திரைப்படத்தின் முதற்படியிலிருந்து பெறப்பட்ட சேதாரமில்லாத குறுவட்டு வடிவம் யாரிடமாவது இருக்கக்கூடும் என்று நான் நம்பவில்லை. அப்படியிருந்தாலும் நிறமழிந்த, ஒலிப்பதிவுத் தரமிழந்த பதிப்புகளே காணப்படக்கூடும். ஆனால், அத்திரைப்படம் வெளியான நாளில் வெண்திரையில் கண்ட அந்தக் காட்சியழகுகளை மறக்க முடியாது. யாம் கண்ட இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் ஒரே நோக்கில் அத்திரைப்படத்தை மணிரத்தினம் எடுத்திருக்க வேண்டும்.

    திருடா திருடா ஒரு நகைச்சுவைத் திரைப்படம் என்றும் உறுதியாகக் கூற முடியவில்லை. படத்திலிருந்து ஒரு நகைச்சுவைத் துணுக்கைச் சொல்லிச் சிரிக்க வைக்க முடியாது. ஆனால், படம் கலகலப்பாகவே செல்லும். 'ஓடுறா ஓடுறா... புடிடா புடிடா...' வகையிலான நகைச்சுவை அது.

    கதை உங்களுக்கு நினைவிருக்கலாம். சிறு திருடர்கள் இருவர் தாம் திருடச் செல்லுமிடத்தில் ஒருத்தி தூக்கிட்டு இறக்க முயல்வதைக் காண்பார்கள். திருடர்களால் காப்பாற்றப்படும் அப்பெண் தன்னையும் உடனழைத்துச் செல்லும்படி மிரட்டுவாள். அவளையும் இழுத்துக்கொண்டு ஓடுவார்கள். இதற்கிடையே புதிய பணத்தாள்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு பெட்டகம் தீயவர்களால் களவாடப்படும். அத்திட்டத்திற்கு மூளையாகச் செயல்பட்ட தலைவனும் அப்பெட்டகத்தைத் தேடி வருவான். தலைவனிடமிருந்து தப்பிக்க நினைக்கும் நடன மாது ஒருத்தியும் சிறு திருடர்களின் குழுவோடு சேர்ந்து திரிவாள். அவர்களுக்கிடையே இளமை ததும்புவதால் ஏற்படும் உடல்மன நெருக்கடிகள் ஒருபக்கம். பெட்டகத்தைக் கண்டுபிடிக்கும் பணியின்பொருட்டு ஏவப்படும் நடுவணாய்வுப்புல (CBI) அதிகாரிகள் சிலர் நூலிழையளவில் பின்தொடர்ந்தபடி இருப்பார்கள். கடைசியில் அப்பெட்டகம் என்னாகிறது, சேர்ந்து ஓடியவர்கள் என்னாயினர் என்பதே முடிவு.

    Manirathnam's unforgettable classic Thiruda Thiruda

    எப்படிப் பார்த்தாலும் இது அச்சு அசலான இந்தியானா ஜோன்ஸ் கதைதான். அதைத் தமிழ் மண்ணுக்கேற்ப திறமையாய்த் தன்வயப்படுத்திக்கொண்டார் மணிரத்தினம். இத்திரைப்படத்தில் பல்வேறு நுட்பங்கள் இருந்தன. எழும்பூர்ப் பழம்பொருட்காட்சியகத்தின் முகப்பை, 'கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு...' பாடலில் கண்டதைப்போல் அழகாக நேரில்கூடக் காண முடியாது. ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமைப் பற்றியே தனிக்கட்டுரை எழுத வேண்டும். அப்படத்தின் பாடல்கள்தாம் முதன்முதலில் குறுவட்டில் பதியப்பட்டு வெளியிடப்பட்டன என்பார்கள். எழுத்தாளர் சுஜாதா அதைக்கேட்டுவிட்டு 'ஒவ்வோர் ஒலியும் துல்லியம்' என்று பாராட்டி எழுதினார். இனி எதிர்காலமானது இத்தகைய குறுவட்டுகளில்தான் என்றும் அவர் கூறினார். அவர் கூற்றை யாரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு அதுதான் நடந்தது.

    திருடா திருடா திரைப்படம் வணிக அளவீடுகளில் வெற்றி பெறவில்லை என்று கூறுகிறார்கள். ரோஜாவுக்கு அடுத்து வெளியாகும் மணிரத்தினத்தின் படம் மற்றொரு தீவிரவாதப் படமாகவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், அவர் ஒரு கலகலப்பான 'திருடன் போலீஸ்' படத்தை எடுத்திருந்தார். எதிர்பார்ப்பும் கிடைப்பும் எதிர்நிலைப்பாட்டில் இருந்தமையால் அப்படம் தோற்றிருக்கலாம். ஆனால், திருடா திருடாவைத் திரையில் பார்த்தவர்கள் அந்த நுகர்ச்சியின் தனித்த இன்பத்தை மறந்திருக்கவே மாட்டார்கள்.

    English summary
    A nostalgia on Manirathnam's Thiruda thirudi, a 90's classic.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X