Ponniyin Selvan - மணிரத்னம் போட்டிருக்கும் ப்ளான்.. பச்சைக்கொடி காட்டிய லைகா?
சென்னை: Ponniyin Selvan (பொன்னியின் செல்வன்) பொன்னியின் செல்வன் படம் தொடர்பாக மணிரத்னம் தனது ப்ளானை மாற்றியிருப்பதாகவும் அதற்கு லைகா நிறுவனமும் பச்சைக்கொடி காட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன். சோழர்கள் காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தையும், அவரது புனைவையும் சேர்த்து வார பத்திரிகை ஒன்றில் தொடராக எழுதினார். அது மிகப்பெரிய வரவேற்பைப் பெற அந்தத் தொடர் புத்தகமாக வடிவம் பெற்றது. நாவல் எழுதப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலானாலும் இன்றுவரை பலரும் அதனை விரும்பி படித்துவருகின்றனர்.

திரைப்படமாக்கிய மணிரத்னம்
பொன்னியின் செல்வன் நாவலை எப்படியாவது திரைப்படமாக பார்த்துவிட வேண்டும் என நாவலை படித்தவர்கள் ஆவலோடு காத்திருந்தனர். அவர்களின் ஆவலை நிவர்த்தி செய்யும் விதமாக மணிரத்னம் பொன்னியின் செல்வனை திரைப்படமாக இயக்குகிறார் என அறிவிப்பு வெளியானது. லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வனில் கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்தது. கடந்த வருடம் முதல் பாகம் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றது.

ஏப்ரலில் பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பலத்த வரவேற்பைப் பெறும் என நம்பப்படுகிறது. இதன் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. கமல் ஹாசன் கலந்துகொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார். ட்ரெய்லருக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்திருக்கின்றனர்.

மணிரத்னத்தின் புதிய ப்ளான்
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மொத்தம் ஐந்து பாகங்களை கொண்டது. ஐந்து பாகங்களை இரண்டு பாகங்களாக சுருக்கி மணிரத்னம் படமாக எடுத்திருக்கிறார் என கூறப்பட்டது. ஆனால் அப்படி சுருக்கும்பட்சத்தில் நாவலின் மையக்கருவும், நாவலில் கூறப்பட்ட பல விஷயங்களும் ரசிகர்களிடம் எளிதாக சேராது. அதனால்தான் நாவல் வாசித்தவர்களில் ஒருதரப்பினருக்கு படத்தின் மேல் பெரிதாக ஈர்ப்பு இல்லை என கூறப்பட்டது. இருந்தாலும் இரண்டாம் பாகத்தின் ரன்னிங் டைம் அதிகம் என்பதால் மணிரத்னம் தன்னால் முடிந்த அளவு நாவலின் கரு சிதையாமல் காட்சிகளை வைத்துவிடுவார் என பலரால் கருதப்பட்டது. ஆனால் இப்போது மணிரத்னம் புதிய ப்ளானை போட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மணிரத்னத்தின் ப்ளான் என்ன?
அதாவது பொன்னியின் செல்வன் நாவலில் கதை நடக்கும் காலகட்டம் என்பது அருள்மொழிச்சோழன் (ராஜராஜ சோழன்) அரியணையில் ஏறுவதற்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பதுபோல் இருக்கும். அதை தழுவித்தான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் உருவாக்கியிருக்கிறார் மணிரத்னம்.

பச்சைக்கொடி காட்டிய லைகா?
ஆனால் இப்போது திரைப்படத்துக்கு மக்கள் மத்தியில் கிடைத்திருக்கும் வரவேற்பையும், எழுந்திருக்கும் எதிர்பார்ப்பையும் அடுத்து பொன்னியின் செல்வன் படத்தை மூன்று, நான்கு பாகங்கள்வரை நீட்டிக்க மணிரத்னம் முடிவு செய்திருக்கிறாராம். இதற்கு லைகா நிறுவனமும் தாரளமாக பச்சைக்கொடி காட்டியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. இரண்டு பாகங்களுக்கும் ஏற்கனவே 500 கோடி ரூபாய்க்கும் மேல் பட்ஜெட் ஆகியிருந்த சூழலில் இதற்கு மேற்கொண்டு செலவாகும் எனவும் ஆனால் அதற்கு லைகா நிறுவனம் கவலைப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

3,4 பாகங்களில் என்ன இருக்கும்?
பொன்னியின் செல்வன் 3 மற்றும் 4ஆவது பாகாங்களில் ராஜராஜ சோழனின் ஆட்சி, தஞ்சை பெரிய கோயில் எப்படி கட்டப்பட்டது, ராஜராஜ சோழன் எப்படி இறந்தார், அவருக்கு பிறகான சோழர்களின் ஆட்சிக்காலம் எப்படி இருந்தது உள்ளிட்டவைகளை திரையில் காட்ட மணிரத்னம் திட்டமிட்டிருப்பதாக கோலிவுட்டில் பேச்சு பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











