ட்ரெயிலருக்கே மேக்கிங் வீடியோவா.. இசை வெளியீட்டிற்கு மிரட்டலாக தயாராகும் பொன்னியின் செல்வன் 2 டீம்!
சென்னை : நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீசாகவுள்ளது பொன்னியின் செல்வன் 2 படம்.
இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி ரிலீசான நிலையில் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் இந்தப் படம் குவித்தது.
இந்நிலையில் அடுத்தமாதம் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு நாளைய தினம் சென்னையில் நடைபெறவுள்ளது.

பொன்னியின் செல்வன் படம்
நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களை ஒரே இடத்தில் வைத்து வேலை வாங்க முடியுமா, ஒரே படத்தில் இணைக்க முடியுமா என்ற கேள்வி முன்னதாக எழுந்தது. ஆனால் பொன்னியில் செல்வன் படத்தின்மூலம் இதை சாத்தியமாக்கினார் மணிரத்னம். அதிலும் தன்னுடைய கனவு பிராஜெக்டில் இதை சாத்தியப்படுத்தினார். இந்த உழைப்பின் விளைவை கடந்த ஆண்டில் தமிழ் சினிமாக கண்கூடாக பார்த்தது.

ரசிகர்களை கவர்ந்த பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் படம் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முன்னதாக கல்கியின் பொன்னியின் செல்வன் ஏற்படுத்திய பிரமிப்பை இந்தப் படமும் கொடுத்தது. வந்தியத் தேவன் என்றால் எப்படி இருப்பார், குந்தவை எந்த அளவிற்கு அழகும் கம்பீரமும் கொண்டவராக இருப்பார், ஆதித்த கரிகாலன் அருண்மொழி வர்மன் இவர்களின் தோற்றங்கள் எப்படி இருக்கும். இந்தக் கேள்விகளுக்கு இந்தப் படத்தின்மூலம் விடைத்தேடிக் கொடுத்திருந்தார் மணிரத்னம்.

ஏப்ரல் 28ல் வெளியாகும் 2வது பாகம்
இந்தப் படம் கொடுத்த வெற்றியின் சூட்டோடு இரண்டாவது பாகத்தையும் வெளியிட தயாரிப்புத்தரப்பு தீர்மானித்த நிலையில், இதோ, ரிலீசுக்கு தயாராகியுள்ளது பொன்னியின் செல்வன் பார்ட் 2. முன்னதாக முதல் பாகத்தில் கேரக்டர்களின் அறிமுகத்திற்கே அதிகமான அவகாசம் தேவைப்பட்ட நிலையில், அழுத்தமான விஷயங்கள் பகிரப்பட வில்லை என்றே கூறலாம். இந்நிலையில், இரண்டாம் பாகத்தில் இந்தக்குறை நீக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

பிரமோஷன்களை துவக்கிய படக்குழு
படம் ரிலீசாக சரியாக ஒரு மாதம் உள்ள நிலையில், முன்னதாகவே படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் துவக்கியுள்ளனர். வந்தியத்தேவன், குந்தவை உள்ளிட்ட கேரக்டர்களில் கார்த்தி, த்ரிஷா உள்ளிட்டவர்கள் எப்படி பொருந்தினார்கள், அவர்களுக்காக பின்புலத்தில் உழைத்தவர்கள் ஆகியவற்றை இணைந்து முன்னதாக ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அகநக பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இசை & ட்ரெயிலர் வெளியீடு
இந்நிலையில் நாளைய தினம் இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீடு சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளார். இதற்காக தற்போது படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்திற்கான உழைப்பு மற்றும் ட்ரெயிலர் உருவாக்கத்திற்கான உழைப்பு ஆகியவற்றை இணைத்து மேக்கிங் வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டவர்களுடன் சிஜி வேலைகளுக்காக எவ்வளவு பேர் கணினி முன்பு மெனக்கெட்டனர் என்பதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

உருவாக்கத்திலும் பிரம்மாண்டம்
படத்தின் காட்சிகளில் மட்டும்தான் பிரம்மாண்டத்தை பார்க்க முடியுமா, அதன் உருவாக்கத்திலும் பார்க்க முடியும் என்பதை இந்த வீடியோ பறைசாற்றுகிறது. மேலும் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் ஜெயராம் உள்ளிட்டவர்களின் டப்பிங் வீடியோவும் இந்த வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது. கார்த்தி டப்பிங் ஸ்டூடியோவில் தன்னுடைய கேரக்டராகவே மாறி, அதே முகபாவனைகளுடன் டப்பிங் கொடுப்பதையும் பார்க்க முடிகிறது. அனைவரின் அர்ப்பணிப்போடு பொன்னியின் செல்வன் படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











