மனிஷா யாதவ் சர்ச்சை முதல் மனைவியுடன் விவாகரத்து வரை.. மாமனிதன் இயக்குநரை சுற்றும் பிரச்சனைகள்!
சென்னை: சமந்தா, தனுஷ், ஜி.வி. பிரகாஷ், ஜெயம் ரவி என வரிசையாக தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் விவாகரத்து அறிவிப்பை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மான் தனது 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக அறிவித்தது இந்திய ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், கோலிவுட்டில் அடுத்து ஒரு அதிர்ச்சிகரமான விவாகரத்து அறிவிப்பு இன்று அதிகாலை வெளியாகி உள்ளது.
தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன், கோழிப்பண்ணை செல்லதுரை உள்ளிட்ட பல நல்ல படங்களை இயக்கிய கிராமத்து இயக்குநர் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சீனு ராமசாமி தனது மனைவியை பிரிவதாக அறிவித்துள்ளார்.

17 ஆண்டுகால திருமண பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக இன்று அதிகாலை தனது ட்விட்டர் பக்கத்தில் சீனு ராமசாமி அறிவித்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சமீப காலமாக சீனு ராமசாமியை சுற்றி ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து இங்கே காணலாம்.
மனிஷா யாதவ்வுக்கு பாலியல் தொல்லை: வழக்கு எண் 18/9, திரிஷா இல்லைன்னா நயன்தாரா உள்ளிட்ட படங்களில் நடித்த இளம் நடிகை மனிஷா யாதவ் சினிமாவில் இருந்து ஒதுங்க காரணமே சீனு ராமசாமி கொடுத்த பாலியல் தொல்லை தான் என கடந்த ஆண்டு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதி நடித்து இன்னமும் வெளியாகாமல் இருக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் முதலில் கமிட்டானது மனிஷா யாதவ் தானாம். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் தொடர்ந்து சீனு ராமாசமி அவருக்கு கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக அந்த படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாக கூறியுள்ளார்.
மறுத்த சீனு ராமசாமி: ஆனால், சீனு ராமசாமி தொடர்ந்து பல ட்வீட்களை போட்டு அதை மறுத்து வந்தார். பத்திரிகையாளர் பிஸ்மி, அந்தணன் உள்ளிட்டோர் தான் முதன்முதலாக சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவ்வுக்கு கொடுத்த பாலியல் தொல்லைகளை அம்பலப்படுத்தினர். அதன் பின்னர் நடிகையும் அதை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து அறிவிப்பு: இந்நிலையில், அந்த பிரச்சனை முடிந்து ஒரு வருடம் கழித்து தற்போது சீனு ராமசாமி தனது மனைவி தர்ஷனாவை பிரிவதாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், "அன்பானவர்களுக்கு வணக்கம்.. நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன்.அவரும் அறிவார்.
இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்.
அன்புடன்
சீனு ராமசாமி." எனக் குறிப்பிட்டுள்ளார்.

கரு. பழனியப்பன் விமர்சனம்: "கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் அரங்க வெளியீட்டின்போது வெற்றி பெறவில்லை என்றாலும் ஓடிடி வெளியீட்டுக்கு பிறகு பலரும் தங்களை பாராட்டுகிறார்கள். அதை தாங்களும் தங்களது வலைதள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்கின்றீர். நிற்க. உங்களை பாராட்டுவதில் எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால் கோழிப்பண்ணை செல்லதுரை போல குறைகளுடன் கூடிய படைப்பை கோபுரத்தின் மீது வைத்து பாராட்டுவது என்பது அவரது பண்பை காட்டுகிறது. அதை நமக்குரியது என நினைத்து ஏற்றுக்கொள்வது நம்முடைய பயணத்தை தடை செய்யக்கூடும். சீனு ராமசாமி ஆகிய நீங்கள் செல்லக்கூடிய தூரமும் அடையக்கூடிய உயரமும் அளப்பரியது. இந்தக் குழந்தை பாராட்டுக்களில் குதூகலித்து தேங்கி நின்றுவிடாதீர்கள்." என கரு. பழனியப்பன் சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். தர்மதுரை, மாமனிதன் படங்களுக்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கிய படங்கள் சரியாக ஓடாத நிலையில், அவரது சொந்த வாழ்விலும் தற்போது சோகம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











