கல்கி படத்தில் கமல் நடிக்க இதுதான் காரணமா? மீண்டும் வலம் வரும் மணிவண்ணன் பேசிய சர்ச்சை பேச்சு!
சென்னை: விஷ்வரூபம்னு தான் பெயர் வைப்பார் கமல், சிவரூபம்னு பெயர் வைக்க மாட்டார். தசாவதாரம் என்று தான் பெயர் வைப்பார் கடவுள் மற்ற அவதாரங்களே எடுக்கலையா என கமல் ஒரு நல்ல ஐயங்கார் என மறைந்த மணிவண்ணன் பேசிய வீடியோ ஒன்று சமீபத்தில் மாமன்னன் படம் வெளியான சமயத்தில் அதிகமாக வலம் வந்து சர்ச்சையை கிளப்பியது.
தேவர்மகன் படம் தனக்கு ஏற்படுத்திய வலி தான் பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் படங்கள் உருவாக காரணம் என மாரி செல்வராஜ் கமல் முன்னிலையிலேயே பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால், அப்பவே கமல் பற்றி நடிகர் மணிவண்ணன் பேசிய பேச்சு இப்போது பிரபாஸின் கல்கி படத்தில் அவர் நடிக்க சம்மதித்தது வரை கனெக்ட் ஆகிறதே என நெட்டிசன்கள் மீண்டும் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

சிவன் முருகனை கலாய்த்து: காதலா காதலா படத்தில் முருகனை கனவு காட்சியில் கலாய்த்து காட்சிகள் இடம்பெற்றிருப்பதை கண்டித்து அப்போதே பிரச்சனைகள் கிளம்பின.
அதே போல பம்மல் கே சம்மந்தம் படத்தில் சிவபெருமான் வேஷத்தை போட்டுக் கொண்டு பபுள்கம் விட்டு நடிக்கும் காட்சியில் கமல் நடித்ததற்கும் சைவர்கள் மத்தியில் கண்டனங்கள் குவிந்தன.

ஓம் நமோ நாராயணா: தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்கள் போட்டு நடித்திருப்பார். அந்த படத்தின் ஃபிளாஷ்பேக் காட்சியில், சிவ நாமத்தையே சொல்ல மாட்டேன் என செத்தாலும் பரவாயில்லை என ஓம் நமோ நாராயணா என பெருமாள் பாதத்தில் அடித்துக் கொண்டு சொல்ல, பெருமாளுடன் கமலையும் கடலில் கட்டித் தூக்கி எறிந்து விடும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
கமல் பற்றி மணிவண்ணன் பேச்சு: கமல் ஒரு நல்ல ஐயங்கார் என்றும் விஷ்வரூபம்னு தான் பெயர் வைப்பார் கமல், சிவரூபம்னு பெயர் வைக்க மாட்டார். தசாவதாரம் என்று தான் பெயர் வைப்பார் கடவுள் மற்ற அவதாரங்களே எடுக்கலையா என்றும் கமல் தப்பித்து செல்லும் இடங்களில் ஸ்ரீராமர் துணைன்னு இருக்கும் கவனிங்க என அதற்கு முன் எந்தவொரு நடிகரும் கமல் பற்றி பேசத் துணியாத விஷயங்களை மணிவண்ணன் பேசியிருப்பார்.

அந்த வீடியோவை மாமன்னன் ஆடியோ வெளியீட்டுக்கு பிறகு எழுந்த தேவர்மகன் சர்ச்சையின் போது மாரி செல்வராஜ் ரசிகர்கள் ஷேர் செய்து வந்த நிலையில், மீண்டும் அந்த வீடியோ காட்சிகள் தற்போது வலம் வரக் காரணம் பிரபாஸின் கல்கி படத்தில் கமல் இணைந்தது தான் என்கின்றனர்.

கல்கியும் விஷ்ணு அவதாரம்: இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி நடித்து வரும் டோலிவுட் படமான கல்கி 2898 ஏடி படத்தில் நடிகர் கமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அந்த படமும் விஷ்ணுவின் அவதாரம் என்பதால் தான் கமல் ஓகே சொல்லியிருக்கிறார் என்கிற விமர்சனமும் சமூக வலைதளங்களில் வெடித்துள்ளது.
அன்பே சிவம்: நடிகர் மணிவண்ணனின் வீடியோக்களை ஷேர் செய்து கமல் எப்போதுமே தன்னை ஒரு ஐயங்காராகவே காட்டிக் கொள்கிறார். அவர் நாத்திகவாதி எல்லாம் கிடையாது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வரும் நிலையில், அன்பே சிவம் படத்தில் எப்படி கமல் நடித்திருப்பார். அன்பே வெங்கடாசலபதி என்று பெயர் வைத்தா அவர் நடித்தார் என கமல் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











