31 Years Of Amaidhipadai: கஸ்தூரிக்கு அல்வா கொடுத்த சத்யராஜ்... 31 வருஷம் ஆகியும் மறக்கமுடியலயேப்பா!
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான படங்கள் ரிலீஸ் ஆனாலும், சில படங்கள் மட்டுமே காலத்திற்கும் கொண்டாடப்படும் படங்களாக, அதாவது கல்ட் கிளாசிக் வரிசையில் இடம் பெறுகின்றது. அப்படியான ஒரு படம்தான் அமைதிப்படை. மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடித்து, கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான படம். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். அரசியல்வாதியின் நெருக்கமான வாழ்க்கையை மிக நெருக்கமாக காட்ட முயற்சித்த படங்களில் இப்படம் மற்ற எல்லா படங்களுக்கும் மாஸ்டர் கிளாஸ். இப்படம் வெளியாகி 31 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை இந்தத் தொகுப்பில் காணலாம்.
நடிகர் மணிவண்ணன் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டும் இல்லாமல், இயக்குநராக, தயாரிப்பாளராக என பல பரிமாணங்களில் இருந்துள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படத்தினை எடுத்துக் கொண்டால், ஒரு படத்துடன் மற்றொரு படத்திற்கு கொஞ்சமும் சம்பந்தம் இருக்காது. அப்படி இருக்கும்போது, இவரது இயக்கத்தில் வெளியாகி இன்று அதாவது 2025ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி தனது 31வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் படம் அமைதிப்படை.

இப்படம் தமிழ் சினிமாவிலேயே மிகவும் முக்கியமான படம். படத்தில் சத்யராஜ் உடன் மணிவண்ணன், ரஞ்சிதா, சுஜாதா, கஸ்தூரி, அல்வா வாசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் அல்வா வாசுவிற்கு இந்தப் படத்தில் நடித்த பின்னர்தான் அல்வா வாசு என்ற பெயரே வந்தது. படம் போகின்ற போக்கில் பல்வேறு அரசியல் சூழல்களை சமூக வரலாற்று நிகழ்வுகளை அரசியல் நையாண்டியாக கையாண்டிருக்கும்.
சத்யராஜ்: முதலில் இந்தப் படத்தின் கதையைக் கூறும்போது சத்யராஜ் படத்தை வேண்டாம் எனக் கூறிவிடலாம் என்ற மனநிலையில்தான் படத்தின் கதையைக் கேட்டுள்ளார். ஆனால், மணிவண்ணன் கதை சொல்ல சொல்ல, படத்தின் கதையும் திரைக்கதையும் சத்யராஜுக்கு மிகவும் பிடித்துப்போகவே, படத்தில் தானே நடிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். படத்தில் சத்யராஜுக்கு பல்வேறு வசனங்கள் காலத்திற்கும் நின்று பேசும் வசனங்களாக அமைந்துவிட்டது.

வசனங்கள்: அதில் மக்களிடம் மிகவும் வரவேற்பைப்பெற்ற வசனங்கள் என்றால், " சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ, உங்க அப்பனுக்கு கையில காசு இருக்குதோ இல்லையோ எல்லா விஷயத்திலும் ஒரு கெத்துதான், என்னங்க மணி கால் படுதுங்களா? அங்கதான் அத்தனை இடம் இருக்குதே அங்க தள்ளி நிக்கலாம்ல..இங்க ஏறீட்டு வந்தா?, மத்தவங்களப் பத்தி எனக்கு தெரியாதுங்க, நான் எப்பவுமே எல்லாருக்கும் அல்வா குடுத்துதாங்க பழக்கம், ஆறு ரவுண்டு குடுச்சதுக்கு அப்பறமும் மப்பு ஏறலனா.. அந்த கருமத்தை எதுக்கு குடிக்கோனும்" என கூறிக்கொண்டே போகலாம்.

பார்ட் 2: அமைதிப்படை படத்தில் இவ்வாறு பல அட்டகாசமான வசனங்கள் சத்யராஜ்க்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு படம் வெற்றி பெறவேண்டும் என்றால், அந்தப் படத்தின் வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலிமையானதாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படமும் ஒரு சான்று. படம் தொடங்கியதில் இருந்து கடைசி வரை அரசியல் நையாண்டி வசனங்கள், காட்சிகள் என படமே அட்டகாசமாக இருக்கும். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தையும் மணிவண்ணன் தான் இயக்கினார்.


Click it and Unblock the Notifications











