வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்தில் சிக்கித் தவிக்கும் அசுரன் நடிகை
சென்னை: நடிகை மஞ்சு வாரியர் படப்பிடிப்பிற்காக இமாச்சல பிரதேசத்திற்கு சென்ற இடத்தில் அங்கு சிக்கியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படம் மூலம் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். அவர் தற்போது சனல் குமார் சசிதரன் இயக்கத்தில் மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

கயட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மஞ்சு கடந்த வாரம் இமாச்சல பிரதேசத்திற்கு சென்றார். இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மஞ்சு மற்றும் படக்குழுவை சேர்ந்த 30 பேர் இமாச்சல பிரதேசத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். மஞ்சு தனது சகோதரரும், நடிகருமான மதுவுக்கு போன் செய்து மணாலியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்ரா என்ற இடத்தில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் சத்ராவுக்கு யாரும் வரவோ, இங்கிருந்து யாரும் வெளியே செல்லவோ முடியவில்லை. எங்களுக்கு உணவும் இல்லை என்று மஞ்சு மதுவிடம் தெரிவித்துள்ளார்.
மஞ்சு வாரியர் மற்றும் படக்குழு குறித்து அறிந்த மத்திய அமைச்சர் வி. முரளிதரன் இமாச்சல பிரதேச மாநில முதல்வர் ஜெய் ராம் தாகூரை தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











