என் விவாகரத்துக்கு காரணம் பாவனா உள்ளிட்ட நடிகைகளா?- மஞ்சு வாரியர் விளக்கம்
கொச்சி: எனது திருமண வாழ்க்கை முறிந்ததற்கும் பாவனா உள்ளிட்ட என் தோழிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நடிகை மஞ்சு வாரியர் விளக்கம் தெரிவித்துள்ளார்.
தொன்னூறுகளில் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் மஞ்சு வாரியர். 1998-ம் நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்ட மஞ்சு, ஒரு மகளுக்குத் தாயாகி, 15 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை நடத்தினார்.
ஆனால் திடீரென திலீப் - மஞ்சு இடையோ கருத்து வேறுபாடு தோன்றியது. இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். மகள் மீனாட்சி தந்தை திலீப்புடன் இருந்தார். இந்த நிலையில்தான் இருவரும் விவாகரத்து கேட்டு திடீரென கொச்சி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் 2015 ஜனவரி 27-ந்தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தனர்.

காரணம் என்ன?
திலீப்-மஞ்சு வாரியர் விவாகரத்துக்கு காரணம் என்ன? அவர்களை பிரித்தது எது? என திரையுலகிலும், ரசிகர்கள் வட்டாரத்திலும் பல்வேறு கருத்துக்கள் உலா வந்தன.

தோழிகள்
குறிப்பாக மஞ்சுவாரியரின் தோழிகள் நடிகை பாவனா உள்ளிட்டோர்தான் அவரது விவாகரத்துக்கு காரணம் என பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு முடிவு கட்டும் வகையில் தனது பிரிவுக்கான காரணம் என்ன? என்பதை மஞ்சுவாரியர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டார்.

தனிப்பட்ட முடிவு
மிக நீண்ட அந்தக் கடிதத்தின் சாராம்சம் இதுதான்:
திலீப்பை பிரிந்தது எனது தனிப்பட்ட முடிவு. இதில் யாரும் என்னை நிர்ப்பந்திக்க வில்லை. திரையுலகிலும், குடும்ப வாழ்க்கையிலும் எனக்கு பலர் நண்பர்களாக இருந்தனர். குறிப்பாக கீத்து, சம்யுக்தா, பாவனா, பூர்ணிமா, ஸ்வேதா மேனன் ஆகியோர் எனது நெருங்கிய தோழிகள்.

தோழிகளைக் குற்றம் சொல்லாதீர்
அடிக்கடி இவர்களிடம் பேசி வந்ததால் நான், திலீப்பை பிரிந்து சென்றதற்கு இவர்களும் காரணம் என்று செய்தி பரவி விட்டது. இது முற்றிலும் தவறான செய்தி. என் பிரிவுக்கு தோழிகள் காரணமல்ல. எனது பிரச்சினையில் தோழிகளை குற்றம் சொல்வதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

மன்னிப்பு
இந்த குற்றச்சாட்டு காரணமாக அவர்களுக்கு வருத்தம் இருக்கும். வாழ்க்கையிலும் பிரச்சினை ஏற்படக் கூடும். இதற்காக நான் அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் பிஸி
விவாகரத்து முடிவுக்குப் பிறகு மீண்டும் நாயகியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார் மஞ்சு வாரியர். அவருக்கு மலையாளத்தில் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிகின்றன. அவர் நடித்து சமீபத்தில் வெளியான படமும் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழிலும் அவரை நடிக்கக் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











