50 கோடி வசூல்.. தமிழ்நாட்டில் இப்படியொரு சாதனையா?.. மஞ்சுமெல் பாய்ஸ் மொத்த வசூல் இத்தனை கோடியா?
சென்னை: இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் செளபின் சாயிர், ஸ்ரீநாத் பாஸி, தீபக் பரம்போல், கணபதி, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய நிலையில், தமிழ்நாட்டிலும் தூள் கிளப்பி உள்ளது.
மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் தனது படக்குழுவினருடன் சென்னைக்கு வந்து கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், தனுஷ் உள்ளிட்ட பிரபலங்களை சந்தித்து புரமோஷன் நடத்தியது அந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தந்தது. இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூலை அந்த படம் ஈட்டியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

குணா குகை: குணா என்றொரு படம் வெளியாகாமல் இருந்தால் குணா குகை பிரபலமாகி இருக்காது. குணா குகையில் உள்ள சாத்தானின் சமையலறை இடத்துக்கு சென்று அந்த நபர் விழுந்திருக்க மாட்டார். அந்த நிஜ சம்பவத்தை வைத்து மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை சிதம்பரம் உருவாக்கி இருக்க மாட்டார். அனைத்திற்கும் விதை கமல் போட்டதாக மாறியிருக்கிறது.
50 கோடி வசூல்: மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் உலகம் முழுவதும் பல கோடி வசூலை ஈட்டி மலையாள திரையுலகின் இண்டஸ்ட்ரி ஹிட் என படத்தின் இயக்குநர் சிதம்பரம் அறிவித்துள்ளார். மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி உலகளவில் பல நாடுகளில் உள்ள ரசிகர்களும் இந்த படத்தை தங்கள் படம் போல கொண்டாடி பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் தற்போது 50 கோடி ரூபாய் வசூலை இந்த படம் கடந்துள்ளது.
பிரேமலு, பிரமயுகத்தை பின்னுக்குத்தள்ளி: பிப்ரவரி 9ம் தேதி வெளியான பிரேமலு திரைப்படம் 110 கோடி வசூலை ஈட்டியுள்ளது. மேலும், பிப்ரவரி 15ம் தேதி வெளியான மம்மூட்டியின் பிரமயுகம் திரைப்படம் 85 கோடியை பாக்ஸ் ஆபிஸில் அள்ளியிருக்கிறது. அந்த இரு படங்களையும் பின்னுக்குத்தள்ளி பிப்ரவரி 22ம் தேதி வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் அதிரடியாக 175 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.
200 கோடி வசூல்: தமிழ்நாட்டிலேயே மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 50 கோடி வசூல் கடந்த நிலையில், இதுவரை 185 கோடி வசூலை கடந்திருப்பதாகவும் விரைவில் 200 கோடி வசூலை மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் குவித்து மாஸ் காட்டும் என்றும் 21 கோடி ரூபாயில் உருவான ஒரு படம் 200 கோடி வசூல் அடைவது தான் மிகப்பெரிய சாதனை என மலையாள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் தமிழில் வெளியான பல படங்கள் 50 கோடி வசூலை இந்த ஆண்டு கடக்க முடியாமல் தத்தளித்து வருவதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் தான்.


Click it and Unblock the Notifications











