Manjummel Boys: 100 கோடி கிளப்பில் இணைந்த மஞ்சும்மெல் பாய்ஸ்.. மம்மூட்டி படத்தையே ஓரங்கட்டிடுச்சு!
சென்னை: இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் செளபின் சாயிர், கணபதி, ஸ்ரீநாத் பஸ்ஸி, தீபக் பரம்போல், லால், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையமாக வைத்து கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் 2 வாரத்திலேயே 100 கோடி வசூலை மின்னல் வேகத்தில் ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
படத்தின் இயக்குநர் சிதம்பரம் தனது படக்குழுவினருடன் சென்னைக்கு வந்து நடத்திய புரமோஷன் அந்த படத்துக்கு தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தந்தது. இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 15 கோடிக்கும் அதிகமான வசூலை அந்த படம் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விதை கமல் போட்டது: கமல்ஹாசன் படங்கள் தான் சினிமாவுக்கு வரும் பலருக்கும் விக்கிபீடியாவாகவே உள்ளது. அதை பார்த்து கற்றுக் கொண்டு பல புதிய படைப்புகளை தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழிப் படங்களும் உருவாக்கி வருகின்றன. ஆளவந்தான் படம் தான் கில் பில் படத்துக்கான அச்சாணி என்றே சொல்லப்படுகிறது. வெளிநாடுகளில் வெளியான சிறந்த படைப்புகளை நம்ம ஊர் ரசிகர்களுக்கு ஏற்ப அந்த காலத்தில் இருந்தே கொடுத்து வந்து தமிழ் சினிமாவின் டெக்னாலஜி வளர்ச்சியில் அதிக பங்காற்றி உள்ளார் கமல்ஹாசன். குணா என்றொரு படம் வெளியாகாமல் இருந்தால் குணா குகை பிரபலமாகி இருக்காது. அந்த நிஜ சம்பவம் நடந்திருக்காது. தற்போது அதை வைத்து இப்படியொரு பிளாக்பஸ்டர் ஹிட் படம் கிடைத்திருக்காது.
100 கோடி வசூல்: மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் நேற்று 90 கோடி வசூலை ஈட்டிய நிலையில், நேற்று இரவே 100 கோடி வசூலை ஈட்டியதாக படத்தின் இயக்குநர் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டு ரசிகர்கள் காட்டிய பேரன்பிற்கு மிகப்பெரிய நன்றி என பதிவிட்டு இருந்தார். மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி உலகளவில் பல நாடுகளில் உள்ள ரசிகர்களும் இந்த படத்தை தங்கள் படம் போல கொண்டாடி பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.
பிரேமலு, பிரமயுகத்தை பீட் பண்ணிடுச்சு: பிப்ரவரி 9ம் தேதி வெளியான பிரேமலு திரைப்படம் தான் மலையாளத்தில் இந்த ஆண்டு முதல் படமாக 100 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், பிப்ரவரி 15ம் தேதி வெளியான மம்மூட்டியின் பிரமயுகம் திரைப்படம் 100 கோடியை ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த இரு படங்களும் 75 கோடி வசூலை கடந்த நிலையில், பிப்ரவரி 22ம் தேதி லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்டாக வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் அதிரடியாக 100 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
தமிழில் படம் இயக்கும் சிதம்பரம்: மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா குகை, "கண்மணி அன்போடு காதலன்" பாடல் என பல தமிழ் விஷயங்கள் கனெக்ட் ஆனது தான் இப்படியொரு வெற்றி இங்கேயும் கிடைக்க காரணம் என்கின்றனர். தமிழ்நாட்டுக்கு வந்து கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், சியான் விக்ரம், தனுஷ், சித்தார்த் உள்ளிட்ட பிரபலங்களை சந்தித்த சிதம்பரத்தை தமிழ் படம் ஒன்றை இயக்க பிரபல தயாரிப்பாளர் ஒருவர் லாக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











