ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலா?.. பாக்ஸ் ஆபிஸில் மஞ்சுமெல் பாய்ஸ் செய்த மகத்தான சம்பவம்!
திருவனந்தபுரம்: இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட பலர் நடித்துள்ள மஞ்சுமெல் பாய்ஸ் படம் மலையாள ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. கமல்ஹாசன் நடித்து வெளியான குணா படம் வரலைன்னா இப்படியொரு படமே வந்திருக்காது என்கிற நிலையில், சென்னைக்கே கிளம்பி வந்த அந்த டீம் கமல்ஹாசன் மற்றும் அந்த படத்தை இயக்கிய சந்தான பாரதி உள்ளிட்டோரை நேற்று சந்தித்தனர்.
கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் ஒரே வாரத்தில் ஓஹோன்னு வசூலை அள்ளி அசத்தி வருகிறது. மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரமயுகம் படம் 10 நாட்களில் செய்த சாதனையை இந்த படம் 7 நாட்களில் செய்து அசத்தி விட்டது.

கண்மணி அன்போடு காதலன்: 1991ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி வெளியான குணா படம் ரிலீஸ் ஆன சமயத்தில் ஓடவில்லை. ஆனால், அதன் பின்னர் அது ஒரு கல்ட் படமாக மாறியது. இது ஆர்ட் படம் தான் என கமல்ஹாசனே பழைய பேட்டியில் கூறியிருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற "கண்மணி அன்போடு காதலன்" மற்றும் "பார்த்த விழி பார்த்தபடி பூத்துக்கிடக்க" உள்ளிட்ட பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. குணா படம் செய்யாத வசூலை குணா படத்தால் உருவான மஞ்சுமெல் பாய்ஸ் ஒரே வாரத்தில் வாரிக் குவித்து மாஸ் காட்டியிருக்கிறது.
50 கோடி வசூல்: இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் நடித்து வெளியான நட்பின் அடையாளமான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 7 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் ஈட்டி உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. மம்மூட்டி நடித்த பிரமயுகம் மற்றும் பிரேமலு படங்கள் 10 நாட்களில் 50 கோடி வசூலை கடந்தன.

ஆஸ்கருக்கு சென்ற படத்தின் கதை: Society of the Snow திரைப்படம் ஆஸ்கர் விருது போட்டியில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் போட்டியிட்டு வருகிறது. அந்த படத்தில் பனிமலையில் மாட்டிக் கொண்ட இளைஞர்கள் எப்படி நட்பை வைத்து தப்பிக்கின்றனர் என்பது தான் கதை. அதே போல குணா குகையில் மாட்டிக் கொள்ளும் நண்பர்கள் அங்கிருந்து நண்பர்கள் மூலமே எப்படி தப்பித்து வருகின்றனர் என்பது தான் இந்த மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் கதை.
சென்னையில் மஞ்சுமெல் பாய்ஸ்: கமல்ஹாசனை நேற்று மஞ்சுமெல் பாய்ஸ் டீம் சென்னைக்கு வந்து சந்தித்த சென்ற காட்சிகள் ரசிகர்கள் பலரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது. மேலும், இயக்குநர் சிதம்பரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுதான் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் ரியல் கிளைமேக்ஸ் என கமல்ஹாசனை பார்த்த சந்தோஷத்தை பகிர்ந்திருந்தார். மேலும், பல யூடியூப் சேனல்களுக்கும் படத்தை பற்றிய பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.

உதயநிதியுடன் சந்திப்பு: மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பார்த்து கட்டாயம் இதை அனைவரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள் என பதிவிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினர் நேரில் சந்தித்தனர். 50 கோடி வசூலை ஒரே வாரத்தில் அள்ளிய இந்த திரைப்படம் அடுத்த வாரத்தில் 100 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











