1 Year Of Manjummel Boys: குணா குகை ரகசியத்தை வெளியிட்ட மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு
சென்னை: கடந்த ஆண்டு வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. கொடைக்கானலில் உள்ள குணா குகையில் சிக்கியவரை மீட்கும் நண்பர்களின் உண்மை கதையை மையமாக வைத்து இயக்குநர் சிதம்பரம் இயக்கியிருந்தார். குணா படத்தில் இளையராஜா இசையில் உருவான கண்மனி அன்போடு என்ற பாடலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. இப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடத்தை கடந்த நிலையில், அப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கடந்தாண்டு பிப்.22ஆம் தேதி வெளியானது. இப்படம் கேரளா மட்டுமின்றி தமிழ் நாட்டிலும் சக்கைபோடு போட்டன. குறிப்பாக இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடிக்கு மேல் வசூலித்து வேறலெவல் ஹிட் அடித்தது. இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் அதிகளவில் வசூல் செய்த மலையாள படம் என்ற சிறப்பையும் பெற்றது. இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினர்.

நட்பை பாராட்டும் படம்: கேரளாவில் இருந்து கொடைக்கானலைச் சுற்றி பார்க்க நண்பர்கள் கூட்டமாக வருகின்றனர். அங்கே, குணா குகையின் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்று பிரச்னையில் மாட்டிக்கொள்கின்றார்கள். குணா குகைக்குள் இருக்கும் 'சாத்தானின் சமையலறை' எனக் கூறப்படும் பல அடிகள் ஆழமுள்ள குழிக்குள் விழுந்த நண்பனை மீட்க போராடும் நண்பர்கள் குழுவின் கதையாக உணர்ச்சி பொங்கும் படமாக இருந்தது மஞ்சும்மல் பாய்ஸ்.
குணா குகை: படம் ஆரம்பித்த 20 நிமிடம் வரை ஜாலியாக இருந்தாலும், அடுத்து நடக்கும் ஒவ்வொரு காட்சிகளும் நெஞ்சை பதைபதைக்க வைத்தன. இப்படத்தின் வெற்றிக்கு பிளஸ் ஆக அமைந்தது குணா குகை தான். பின்னர், இளையராஜாவின் கண்மணி அன்போடு என்ற பாடலும் படத்தோடு ரசிகர்களை ஒன்ற வைத்தது. மேலும், குணா குகையை காட்சிப்படுத்தியிருந்த விதம் பிரம்மிக்க வைத்தது. அந்த குகைக்குள் நாமும் இருப்பது போன்ற உணர்வையும் தந்தன.

ரசிகர்கள் ஆரவாரம்: படத்தை பார்த்த அனைவரும் உண்மையில் குணா குகைக்குள் தான் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர் என்று நம்ப தொடங்கிவிட்டனர். ஆனால், குணா குகை தடை செய்யப்பட்ட பகுதி, மக்கள் அதிகமுள்ள பகுதியில் படப்பிடிப்பு நடத்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், குணா குகை போன்ற செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தியிருந்தாலும், இதற்காகவே சுற்றுலா செல்லும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. கொடைக்கானல் சென்ற பலரும் குணா குகையில் நின்று புகைப்படம் எடுக்க தொடங்கினர். அதைப்பற்றிய பேச்சுக்கள்தான் பரவலாக இருக்கிறது.
கமல், ரஜினி பாராட்டு: படத்தை பார்த்து பிரமித்து போன நடிகர்கள் கமல், ரஜினி என பலரும் பாராட்ட தொடங்கினர். ரஜினியும், கமலும், படக்குழுவினரை நேரில் வரவழைத்து அன்பை பொழிந்தனர். தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குநர்களும் பாராட்டு மழையில் பொழிந்தனர். இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற குணா குகையின் ரகசியத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் சந்தான பாரதிக்கு பாராட்டு: உண்மையான குணா குகையை சென்று பார்வையிட்ட படக்குழு இவ்வளவு கஷ்டமான இடத்தில் எப்படி குணா படத்தை எடுத்தார்கள் என்பதை நம்பமுடியவில்லை. குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதி, ஒளிப்பதிவாளர் வேணு ஆகியோர் மீது மிகப்பெரிய மரியாதை வந்ததாக மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











