மஞ்சுமெல் பாய்ஸ் டீம் இளையராஜாவுக்கு ஒத்த பைசா கூட கொடுக்கல.. அனைத்தும் வதந்தி
சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி 200 கோடிக்கும் மேல் வசூல் செய்த மலையாளப் படம் மஞ்சுமெல் பாய்ஸ். இப்படம் தமிழ் நாட்டில் சக்கை போடு போட முக்கிய கராணம் குணா படத்தில் இடம் பெற்றுள்ள கண்மணி அன்போட காதலன் பட பாடல் இடம் பெற்றிருந்ததைக் கூறலாம். இந்த பாடலை இசையமைப்பாளர் இளையராஜாவின் அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக படத்தின் தயாரிப்பாளருக்கு இளையராஜா தரபில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் படத்தில் இருந்து பாடலை நீக்க வேண்டும் என்றும் அனுமதி இல்லாமல் பாடலை பயன்படுத்தியதற்காக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இந்த நோட்டீஸில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
குணா படத்தில் இடம் பெற்றிருந்த அந்த பாடலை படத்தில் பயன்படுத்துவதற்கான உரிமத்தை குணா படத்தின் தயாரிப்பாளரிடம் கேட்டு அதற்குரிய தொகையையும் முன்பே செலுத்திவிட்டதாக மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பு நிறுவவனம் தெரிவித்திருந்தது. ஆனால் தான் இசையமைத்த பாடல்கள் உரிமம் முழுவதும் தனக்கே சொந்தமானவை என்றும் தன் அனுமதியின்றி தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்துவது சட்ட விரோதமானது என இளையராஜா அனுப்பிய நோட்டீஸில் விளக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த விவகாரம் தமிழ்நாடு மற்றும் கேரளா சினிமா உலகில் பெரும் கவனம் பெற்றது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகியது.

மஞ்சுமெல் பாய்ஸ் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றதால் தனக்கு 2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் கேட்கப் பட்டதாகவும், அதன் பின்னர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் இரு தரப்பிலும் இருந்து நடத்தப்பட்டு, இறுதியாக ரூபாய் 60 லட்சம் இழப்பீடாக மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பு நிறுவனம் வழங்குவதாக தெரிவித்ததாகவும் அதற்கு இளையராஜா தரப்பினரும் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினர் தரப்பில் இருந்து இழப்பீடாக இன்னும் பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுப்பு: அதாவது, இளையராஜாவின் பி.ஆர்.ஓ., மற்றும் அவரது வழக்கறிஞர் தரப்பில் இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மஞ்சுமெல் பாய்ஸ் படம் மட்டும் இல்லாமல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கூலி படத்தின் அறிவிப்பில் தனது பாடலை பயன்படுத்தியதற்காக படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ரூபாய் 200 கோடி: மலையாளத்தில் வெளியாகி மலையாள ரசிகர்களை விடவும் தமிழ் சினிமா ரசிகர்களால் அரங்கம் நிறைந்த காட்சிகளால் கொண்டாடப்பட்ட படம் மஞ்சு மெல் பாய்ஸ். இந்த படம் இதுவரை மலையாள சினிமாவில் மற்ற படங்கள் வசூலிக்காத அளவுக்கு ரூபாய் 200 கோடிகளை வசூல் செய்து அசத்தியது. மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினருக்கு இளையராஜாவின் கண்மணி அன்போடு காதலன் பாடல் விவகாரம் மட்டும் இல்லாமல், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது சிராஜ் என்பவர் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
முடக்கம்: அந்த வழக்கில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் தன்னை பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூபாய்.7 கோடி வாங்கிய தயாரிப்பாளர்கள், அதன் பின்னர் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. இது மட்டும் இல்லாமல், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் லாப பங்குத் தொகையையும் தருவதாக சொன்னதாகவும் அதனால்தான் பணம் கொடுத்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் படத்தில் லாபத்தில் என இதுவரை பங்கு தரப்படவில்லை என குற்றம் சாட்டியிருந்தார். இதனால், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களான செளபின் சாஹிர் , பாபு சாஹிர் உள்ளிட்ட மூன்று பேரிடம் நீதிமன்றம் விசாரணை செய்தது. இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்னும் முடியவில்லை.
இந்த வழக்கின் நிலையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது படத்தின் தயாரிப்பாளர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அவர்களால் எப்படி இளையராஜாவுக்கு இழப்பீடு கொடுத்திருக்க முடியும் என பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











