Manjummel Boys Review: கொடைக்கானலில் நடந்த உண்மை கதை.. அடிபொலி சினிமா.. மஞ்சும்மல் பாய்ஸ் விமர்சனம்
சென்னை: பிரேமலு, பிரம்மயுகம் படங்களைத் தொடர்ந்து மலையாளத்தில் மற்றுமொரு அடிபொலி சினிமா இந்த வாரம் வெளியாகியுள்ளது. செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட பலர் நடித்துள்ள மஞ்சும்மல் பாய்ஸ் படம் தான் அது. மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ், மொழிகளை கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் டிவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
மஞ்சும்மல் பாய்ஸ் தமிழ் விமர்சனம்
2006ம் ஆண்டு கொடைக்கானலில் நடந்த உண்மை கதையை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது மஞ்சும்மல் பாய்ஸ். சர்வைவல் த்ரில்லர் ஜானரில் சிதம்பரம் இயக்கியுள்ள இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. கேரளவில் எர்ணாகுளம் அருகேயுள்ள மஞ்சும்மல்லைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் 'மஞ்சும்மல் பாய்ஸ்' என்ற பெயரில் கிளப் ஒன்றை அமைத்து ஜாலியாக டூர் செல்வது வழக்கம். அப்படி அவர்கள் கொடைக்கானல் சென்ற போது நடந்த உண்மைச் சம்பவம் தற்போது மஞ்சுமல் பாய்ஸ் என்ற பெயரில் படமாக வெளியாகியுள்ளது.

சிதம்பரம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி, பாலு வர்கீஸ், அஞ்சு குரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சர்வைவல் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கதை, திரைக்கதை, மேக்கிங் என அனைத்தும் அடிபொலி என விமர்சனம் செய்துள்ளனர். மஞ்சும்மல் பாய்ஸ் படம் மூலம் மலையாள சினிமா சர்வதேச அளவில் சென்றுள்ளதாக விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி கூறியுள்ளார். இந்தப் படத்தில் கதை சொன்ன விதம் அருமையாக உள்ளதாகவும் பாராட்டியுள்ளார்.

மம்முட்டியின் பிரம்மயுகம் படத்தை மஞ்சும்மல் பாய்ஸ் மூவி பாக்ஸ் ஆபிஸில் இருந்து வெளியேற்றிவிட்டது. அட்டகாசமான ஃப்ரெண்ட்ஷிப் மூவியான மஞ்சும்மல் பாய்ஸ், கண்டிப்பாக 100 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என நெட்டிசன் ஒருவர் பாராட்டியுள்ளார். செளபின் சாஹிர் தயாரிப்பாளராகவும் வெற்றிப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு நெட்டிசனோ ஒருபடி மேலே போய்விட்டார். அதாவது மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை வைத்து கோலிவுட்டை ட்ரோல் செய்துள்ளார். "மல்லுஸ்... யார்ரா நீங்களாம்.... வாரா வாரம் ப்ளாக் பஸ்டர் படமா ரிலீஸ் பண்றீங்களே.." என பிரேமலு, பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ் படங்களை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் குணா குகை சீன்களும், 'கண்மணி அன்போடு' பாடல் வரும் காட்சியும் தரமான தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் தருகிறது. இந்தப் படத்தை மிஸ் செய்துவிட வேண்டாம் என அனுஷு ஆண்டோ என்ற நெட்டிசன் ட்வீட் போட்டுள்ளார்.

மலையாளத்தில் வெளியாகியுள்ள மஞ்சும்மல் பாய்ஸ் மிகப் பெரிய வெற்றிப் படம் என சஜின் ஸ்ரீஜித் என்பவர் பாராட்டியுள்ளார். மேலும் இயக்குநர் சிதம்பரம் இரண்டாவது படத்திலும் மாஸ் காட்டியுள்ளார். கமல்ஹாசனின் குணாவிற்கு என்ன ஒரு அழகான அஞ்சலி! பிப்ரவரி மாதம் மலையாள சினிமாவிற்கு சிறப்பானதாக அமைந்துள்ளது என பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

மஞ்சும்மல் பாய்ஸ் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால் பல திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையிலும் மஞ்சுமல் பாய்ஸ் படத்துக்கு அதிக ஸ்க்ரீன்கள் ஒதுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











