Mankatha Day 1 Box Office - மங்காத்தா முதல் நாள் வசூல்.. கில்லி ரெக்கார்டை சல்லி சல்லியாக நொறுக்கிடுச்சே
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, பிரேம்ஜி, வைபவ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த மங்காத்தா திரைப்படம் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தற்போது அப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. நேற்று ரிலீஸான படத்தை ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் பார்த்தார்கள். இந்நிலையில் ரீ ரிலீஸில் முதல் நாளில் படம் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பில்லா படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் நடித்த ஏகன், அசல் ஆகிய இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்திருந்தன. இதனால் அஜித் ரசிகர்கள் ரொம்பவே மன ரீதியாக சோர்வடைந்திருந்தார்கள். அப்படிப்பட்ட சூழலில் அஜித்தின் 50அவது படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் எனவும், படத்துக்கு மங்காத்தா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானபோது ஏகே ரசிகர்கள், அய்யய்யோ வெங்கட் பிரபு இயக்குநரா? என பயப்படத்தான் செய்தார்கள்.
என்ன காரணம்?: அதுவரை அவர் இயக்கியிருந்த சென்னை 600028, சரோஜா உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்தாலும் ரசிகர்கள் முழுவதுமாக நம்பவில்லை. ஜாலியாக படங்கள் எடுக்கும் வெங்கட் பிரபு அஜித்தை ஒழுங்காக ஹேண்டில் செய்துவிடுவாரா அதுவும் ஐம்பதாவது படம் வேறு; கண்டிப்பாக அஜித்தை வைத்து ஜாலியாக படம் எடுக்கிறேன் என்கிற பெயரில் சொதப்பி வைக்கப்போகிறார் என்றெல்லாம் கூறிவந்தார்கள்.

படம் மெகா ஹிட்: ஆனால் வெங்கட் பிரபு மீது அஜித் முழு நம்பிக்கையையும் வைத்திருந்தார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து கடந்த 2011ஆம் ஆண்டு யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாளான ஆகஸ்ட் 31ஆம் தேதி படம் ரிலீஸானது. படத்தின் ஆரம்பத்தில் வழக்கமான வெங்கட் பிரபு ட்ரீட்மென்ட்டே இருந்தது. ஆனால் திரைக்கதை நகர நகர ரசிகர்கள் படத்துக்குள் கனெக்ட் ஆகிவிட்டார்கள். அஜித்துக்கான மாஸ் காட்சிகள் எதுவும் குறைவில்லாமல் படைக்கப்பட்டிருந்தது. படத்தின் பின்னணி இசை, மேக்கிங் என அத்தனையும் தரமாக இருக்க; படத்தின் க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்டோர் ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். இதன் காரணமாக படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.
மங்காத்தா ரீ ரிலீஸ்: அஜித் மற்றும் வெங்கட் பிரபுவின் கரியரில் மங்காத்தா மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது. சூழல் இப்படி இருக்க அந்தப் படம் ரீ ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு நேற்று ரிலீஸானது. டிக்கெட் புக்கிங்கிலேயே படத்துக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் கிடைத்தது. நேற்று வெளியான படத்தை ரசிகர்கள் கொண்டாடத்தோடு தியேட்டருக்கு சென்று பார்த்தார்கள். ரீ ரிலீஸில் பார்க்கும்போதுகூட படம் போர் அடிக்கவில்லை; இயக்குநர் மற்றும் அஜித்தின் தரமான வேலைப்பாடு வியக்க வைப்பதாக பாராட்டினார்கள்.
வசூல் நிலவரம்: இந்நிலையில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட மங்காத்தா முதல் நாளான நேற்று செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மட்டும் நேற்று அந்தப் படம் 4.65 கோடி ரூபாயை அள்ளியிருப்பதாகவும்; இந்திய அளவில் மொத்தம் ஐந்து கோடி ரூபாய் வசூலை தாண்டிவிட்டதாகவும் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி விஜய்யின் கில்லி படம்தான் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் முதல் நாளில் (4.23 கோடி ரூபாய்) அதிகம் வசூல் செய்த படமாக இருந்தது என்றும்; அந்த சாதனையை மங்காத்தா முறியடித்துவிட்டது என்றும் பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்கள் கூறுகின்றன. இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











