Manobala Funeral: விடைபெற்றார் மனோபாலா.. வளசரவாக்கம் மின் மயானத்தில் உடல் தகனம்.. பிரபலங்கள் அஞ்சலி!
சென்னை: வடபழனி, சாலிகிராமத்தில் உள்ள எல்வி சாலையில் அமைந்துள்ள மனோபாலாவின் இல்லத்தில் இருந்து சற்றுமுன் அவரது திரு உடல் அலங்கரிக்கப்பட்ட அமரர் ஊர்தியின் மூலம் வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
வளசரவாக்கத்தில் உள்ள பிருந்தாவனம் மின் மயானத்தில் மனோபாலாவின் உடலுக்கு அவரது மகன் ஹரிஷ் இறுதிச்சடங்குகளை செய்தார். இயக்குநர்கள் ஆர்.கே. செல்வமணி, பேரரசு, ரவிமரியா உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் மின்மயானத்துக்கு சென்று இறுதிச்சடங்கில் பங்கேற்றனர்.
கல்லீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நடிகர் மனோபாலா நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 69.
மனோபாலாவின் குருநாதர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்தனர்.

இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்: நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த், கமல்ஹாசன், விஷால், கார்த்தி உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்கள் வாயிலாக அஞ்சலி செலுத்தினர்.
நடிகர்கள் விஜய், ஆர்யா, விஜய்சேதுபதி, சமுத்திரகனி, சித்தார்த், இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், ஏ.எல். விஜய், பாக்கியராஜ், லோகேஷ் கனகராஜ், எச். வினோத், ரவிமரியா, ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் என பல்வேறு திரை பிரபலங்களும் மனோபாலா மறைவுக்கு நேரிலேயே வந்து அஞ்சலி செலுத்தினர்.
வளசரவாக்கம் மின் மயானத்தில்: சென்னை சாலிகிராமத்தில் உள்ள மனோபாலாவின் வீட்டில் இருந்து அவரது திரு உடல் அலங்கரிக்கப்பட்ட அமரர் ஊர்தி மூலமாக வளசரவாக்கம் மின் மயானத்திற்கு சற்று முன் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
தமிழ் சினிமா ரசிகர்களை தனது சிந்தனையாலும் நகைச்சுவை உணர்வாலும் சிரிக்க வைத்து வந்த ஒரு உன்னத மனிதர் நல்ல பண்பாளர் மனோபாலா 69 வயதில் காலமான நிலையில், அவரது இறுதி ஊர்வலத்தில் ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் அந்த ஏரியா பொதுமக்கள் என பலரும் கண்ணீர் மல்க கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மறக்க முடியுமா மனோபாலாவை: 1982ம் ஆண்டு ஆகாய கங்கை படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான மனோபாலா, நான் உங்கள் ரசிகன், பிள்ளை நிலா, பாரு பாரு பட்டணம் பாரு, டிசம்பர் 31, சிறை பறவை, தூரத்து பச்சை, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் என பல படங்களை இயக்கி உள்ளார்.
1987ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் படத்தை இயக்கிய இயக்குநரும் மனோபாலா தான் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நல்ல நண்பராகவும், ஆலோசகராகவும் இருந்தவர் மனோபாலா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய ஹேர்ஸ்டைலுக்கு சொந்தக்காரரே மனோபாலா தான் என்கின்றனர்.
நடிப்பு மற்றும் இயக்கத்தை தாண்டி சில நல்ல படங்களையும் மனோபாலா தயாரித்துள்ளார். இயக்குநர் எச். வினோத் அறிமுகமான சதுரங்க வேட்டை படத்தை தயாரித்துள்ளார். சதுரங்க வேட்டை 2 படம் வெளியாக ஏகப்பட்ட தடைகள் ஏற்பட்ட நிலையில், எப்படியாவது அந்த படத்தை ரிலீஸ் செய்து விட வேண்டும் என போராடி வந்தவர் கடைசியில் அந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே காலமாகி விட்டார்.


Click it and Unblock the Notifications











