விஜய் கூட ஒரு ஷாட் போதும்... இந்த மாதிரி நேரத்துல அவர் தான் தேவை... மனோபாலா சொன்ன சீக்ரெட்
சென்னை: தமிழில் தவிர்க்க முடியாத இயக்குநரும் காமெடி நடிகருமான மனோபாலா இன்று உயிரிழந்தார்.
கடந்த 8 மாதங்களாக கல்லீரல் பிரச்சினை காரணமாக வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்தார்.
சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்த மனோபாலாவுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் குறித்து பிகில் ஆடியோ விழாவில் மனோபாலா பேசிய வீடியோ டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
விஜய் சீக்ரெட் சொன்ன மனோபாலா
இயக்குநரும் நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் தனது 69வது வயதில் காலமானார். கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த மனோபாலா, சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மனோபாலாவின் மறைவால் திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, இந்தி திரையுலக பிரபலங்களும் மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தனது சினிமா ஆர்வத்தால் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என கலக்கியவர் மனோபாலா. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் காமெடியில் கலாட்டா செய்துள்ளார். இந்நிலையில், தளபதி விஜய் குறித்து மனோபாலா பேசிய வீடியோ டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது. விஜய்யுடன் மின்சார கண்ணா, அழகிய தமிழ் மகன், தலைவா, துப்பாக்கி, நண்பன், தெறி, பிகில் ஆகிய படங்களில் மனோபாலா நடித்துள்ளார்.
இதில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மேடையேறிய மனோபாலா, விஜய் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அட்லீ இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்த இந்தப் படம் 2019ம் ஆண்டு வெளியானது. பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய மனோபாலா, தம்பி விஜய் படம்ன்னா அவருகூட ஒரு சீன் இல்ல, ஒரு ஷாட்ல நடிக்கக் கூப்பிட்டாக் கூட நான் நடிப்பேன் என்றுள்ளார்.
மேலும், ரசிகர்களைப் பார்த்து பேசிய மனோபாலா, உங்கள் மனதுக்கு எதும் பிரச்சினையோ மன அழுத்தமோ இருந்தால் விஜய் தம்பியின் பாடல்களை கேளுங்க. அவ்ளோ எனர்ஜி கிடைக்கும், டிப்ரஷனை விட டபுள் மடங்கு எனர்ஜி கிடைக்கும். அதேபோல், வீரம், சோகம், காதல் என எது வேண்டுமானாலும் விஜய் படங்களை பாருங்கள் எனக் கூறியுள்ளார்.

விஜய்யுடன் படப்பிடிப்பில் கலந்துகொண்டால் மனோபாலா எப்போதுமே உற்சாகமாக இருப்பாராம். விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்றால் மனோபாலாவிடம் இருக்கும் அந்த உற்சாகத்தை வேறு எங்கும் பார்க்க முடியாது என அவருடன் பழகியவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் விஜய் எனர்ஜியின் சீக்ரெட் குறித்து மனோபாலா பேசிய வீடியோவை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











