வடிவேலு வச்சிருந்த காமெடியை இப்ப யாரு வச்சிருக்கா.. நெட்டிசன்கள் கலாய்!
சென்னை: நடிகர்கள் சிலர் கூடினால் அங்கு உற்சாகம் தாண்டவமாடும்.. அதுவே நகைச்சுவை மின்னல்கள் சந்தித்துக் கொண்டால்.. என்னாகும்.. அதேதான்!
நகைச்சுவை நடிகர் மனோபாலா, நடிகரும் இயக்குநருமான சந்தான பாரதி.. இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக அவதாரம் கொண்ட கங்கை அமரன் இவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு பங்ஷனில் கூடிப் பேசியுள்ளனர்.
இவர்களோடு இணைந்தது இன்னொரு புயல்.. அதுதாங்க நம்ம வைகைப் புயல். வடிவேலுவும் இந்த சந்திப்பில் இணைய அந்த இடமே அல்லோகல்லப்பட்டுப் போய் விட்டதாம். பிறகென்ன மனோபலா டிவீட் போட்டு கொண்டாடி விட்டார்.

குபுக் கமெண்ட்ஸ்
அவர் டிவீட் போட்டதை விட ரசிகர்கள் வந்து போட்ட கமெண்ட்டுகள்தான் மிஸைல் ரேஞ்சுக்கு உள்ளது. அதில் ஒருத்தர் கேட்டிருக்காரு பாருங்க.. என்ன அமித்ஷா ஜி எங்க இந்தப் பக்கம் என்று. குபுக்குன்னு பரபரப்பாகி எங்கே அமித்ஷா என்று பார்த்தால், சந்தானபாரதியைத்தான் அந்த அன்பர் ரொம்ப வம்பாக அமித்ஷாஜி என்று கலாய்த்துள்ளார்.

இவிங்க எப்பவுமே இப்படித்தான்
இவிங்க எப்பவுமே இப்படித்தான் என்று நாம அலுத்துக் கொண்டாலும் கூட பாஜககாரர்கள் இதைப் பார்த்து சந்தோஷித்துக் கொள்ளலாம். தாமரை எங்கே மலரும் என்று பலரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே.. இங்கே பாருங்கய்யா.. எங்களைப் பத்தி மக்கள் பேசாத இடமே இல்லை என்று தைரியமாக காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.. (என்னதான் சொல்லுங்க, சந்தான பாரதி ஒரு சாயலில் அமித்ஷா மாதிரிதான் இருக்கிறார்!

காத்திருக்காங்கண்ணே!
வடிவேலு நடிப்பைப் பார்க்க மக்கள் காய்ந்து போய்க் கிடக்கின்றனர். வாய்யா. வாய்யா என்று வாயார வரவேற்க அத்தனை பேரும் காத்திருந்தாலும் கூட மனுஷர் ஒரு படத்திலும் நடிக்காமல் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் வேறு வழியே இல்லாமல் இன்னும் நேசமணி தலையில் சுத்தியல் விழுந்ததைத்தான் ரசித்து வைக்க வேண்டியிருக்கிறது.

எப்பண்ணே வருவீங்க
மனோபாலாவும் வடிவேலுவும் இணைந்த படங்கள் எல்லாமே ஹிட்தான். இருவருக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி. "உன்னையெல்லாம் போலீஸ் வேலைக்கு தப்பா எடுத்திட்டாய்ங்கே".. என்று மனோபாலா பாடியை தட்டி வடிவேலு சொன்ன வசனம் இன்னும் காதுக்குள் டொய்ங் டொய்ங்னு உலா போய்ட்டுதான் இருக்கு. இருவரும் இணையும் நாளை ரசிகர்களோடு சேர்ந்து மனோபாலாவும் எதிர்பார்த்திருக்கிறார் போல.. டிவீட்டில் தெறிக்கிறது அவரது உற்சாகம்.

யாரு வச்சிருக்கா!
கொரோனா காலத்துக் கொடுமைகளையெல்லாம் வடிவேலு பட காமெடிகளைப் பார்த்துதானே நாம கடந்து வந்திருக்கோம். இந்தப் போட்டோவைப் பார்த்ததும் பல மலரும் நினைவுகள்.. அவர்களிடமிருந்த அந்த காமெடியை இப்ப யாரு வச்சிருக்கான்னு கங்கை அமரன் ஸ்டைலில் கேட்டு பழைய நினைவுகளில் மூழ்கிக் கிடக்க வேண்டியதுதான்!


Click it and Unblock the Notifications











