மனோபாலா தயாரிப்பில் நட்ராஜ் நடிக்கும் சதுரங்க வேட்டை!
அறிமுக இயக்குனர் எச்.வினோத் இயக்கும் சதுரங்க வேட்டை படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நடிக்கிறார்.
இவர், 'நாளை', 'மிளகா' போன்ற படங்களில் நாயகனாக நடித்தவர்.
இந்தியில் பிரபல ஒளிப்பதிவாளராக இருந்தாலும், அவ்வப்போது ஹீரோவாக நடித்து ஆசையைத் தீர்த்துக் கொள்வது நட்ராஜ் வழக்கம்.

இஷாரா
சதுரங்க வேட்டையில் நட்ராஜுக்கு ஜோடியாக இஷாரா நடிக்கிறார். இவர்களுடன் இளவரசு, பொன்வன்னன், பிறைசூடன், தரணி, வல்லவன், ராமச்சந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய ஷான் ரால்டன் இசையமைக்கிறார்.
இந்தப் படத்திற்கு வைரமுத்துவும் அவரது மகன் மதன் கார்க்கியும் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்துக்கு வந்துள்ளது.

காசு இருந்தா
படம் குறித்து இயக்குநர் வினோத் கூறுகையில், "இங்க பணம் இருந்தா நீங்க ஹீரோ ஆகலாம், எம்.பி ஆகலாம், எவனையாவது பிடிக்கலேன்னா அடிக்கலாம். மொத்தத்தில் பணம் இருந்தா என்ன வேண்ணா பண்ணலாம். அப்படிபட்ட பணத்தை சம்பாதிக்க ஏன், என்ன வேணா பண்ண கூடாதுன்னு, நினைக்கிற ஒருத்தனோட கதைதான் 'சதுரங்க வேட்டை'.
நல்லவனா வாழ்ந்தா செத்த பிறகு சொர்க்கத்துக்கு போகலாம். கெட்டவனா வாழ்ந்தா வாழும் போதே சொர்க்கத்துல வாழ்லாம்னு சொல்ற ஹீரோவோட கதை இது.

காமெடி
முழுக்க முழுக்க காமெடி, புதுமையான வசனங்கள் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆறு எபிசோடுகளா படத்தோட திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கு.
ரசிகர்களுக்கு இந்தப் படம் புதுமையான அனுபவத்தை தரும். மொத்தத்தில் நம் சமூகத்தின் முன் வைக்கப்பட்ட கண்னாடி இந்த படம். இதில் உங்களையே பார்த்து கொள்ளலாம், சிரிக்கலாம், யோசிக்கலாம்," என்றார்.

மனோபாலா
பிக்சர் ஹவுஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் மனோபாலா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.


Click it and Unblock the Notifications











