பட்டினியே போடமாட்டார்.. எவ்வளவு நல்ல மனுஷன் தெரியுமா?..மனோஜ் பாரதிராஜாவின் வீட்டு பணிப்பெண் உருக்கம்
சென்னை: பாரதிராஜாவின் மகனான மனோஜ் உயிரிழப்பு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி தமிழ்நாட்டில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. என் இனிய தமிழ் மக்களே என்று கூறும் பாரதிராஜாவுக்காகவும், அவரது மகனுக்காகவும் தமிழ்நாடு மக்கள் கலங்குகிறார்கள். மனோஜின் இறுதி சடங்கு நேற்று மாலை நடைபெற்றது. அவருக்கு 48 வயது ஆகும். அவருக்கு நந்தனா என்கிற மனைவியும் ஆர்த்திகா, மதிவதினின் என்கிற இரண்டு மகள்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
என் இனிய தமிழ் மக்களே.. இந்த வசனத்தை கேட்டாலே தமிழர்களின் மனதில் சட்டென்று தோன்றுபவர் பாரதிராஜா. ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்து பலரை திரைத்துறையில் உருவாக்கிய அவர் தனது மகனையும் பெரிய ஹீரோவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். தன்னால் நடிக்க முடியாததை தனது மகனை வைத்து நிறைவேற்றிக்கொள்ள எண்ணினார். அதன்படி தனது இயக்கத்திலேயே அவர் மனோஜை அறிமுகமும் செய்துவைத்தார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. அது பாரதிராஜாவுக்கு கொஞ்சம் அப்செட்டைத்தான் கொடுத்தது.
சறுக்கிய மனோஜ்: முதல் படத்திலேயே மனோஜ் தோல்வியை சந்தித்ததால் முதல் படத்தில் விட்டதை அடுத்தடுத்த படங்களில் எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்கிற வேகமும் அவருக்கு இருந்தது. அதன் காரணமாக தனக்கு வந்த கதைகளில் பெரும்பாலானவற்றில் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டார். ஆனால் அதுவே அவருக்கு சிக்கலையும் ஏற்படுத்தியது. பல படங்களில் அவர் கமிட்டாகி நடித்தாலும் அவை கை கொடுக்கவில்லை. அவற்றில் வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படம் மட்டும்தான் ஓரளவுக்கு வெற்றியை கொடுத்தது.

உதவி இயக்குநர்: மனோஜுக்கு ஆரம்பம் முதலே நடிப்பதில் பெரிதாக ஆர்வம் இல்லாத அவருக்கு இயக்குநராக வேண்டும் என்பதுதான் முதல் ஆசை. அதன்படி மணிரத்னத்திடம் பம்பாய் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதனையடுத்து நடிக்க வந்த அவர்; நடிப்பு கை கொடுக்காததால் மீண்டும் உதவி இயக்குநரானார். அதன்படி ஷங்கரிடம் எந்திரன் படத்தில் வேலை பார்த்தார். தொடர்ந்து புதுமுகங்கள் மற்றும் பாரதிராஜாவை வைத்து மார்கழி திங்கள் என்கிற படத்தை இயக்கினார். அந்தப் படத்துக்கு சுசீந்திரன் கதை எழுதியிருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது.
உயிரிழந்த மனோஜ்: நிலைமை இப்படி இருக்க அவருக்கு சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நலமுடன் இருந்த அவருக்கு நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பாரதிராஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய சோகத்தை கொடுத்திருக்கிறது. பாரதிராஜா கதறி அழுது தனது ஆற்றாமையையும், துக்கத்தையும் வெளிப்படுத்தினார். 80 வயதை கடந்த அவர் தனது மகனின் இழப்பை எவ்வாறு சமாளிக்கப்போகிறார் என்ற கவலை திரைத்துறையினரிடமும் ரசிகர்களிடமும் இருக்கிறது. மனோஜின் இறுதி சடங்கை அவரது இரண்டு மகள்களும் செய்தார்கள்.
வீட்டு பணிப்பெண் உருக்கம்: இந்நிலையில் மனோஜின் வீட்டில் பணி செய்த பெண் ஒருவர் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "மனோஜ் அவ்வளவு நல்ல மனிதர். என்னைவிட அவர் வயதில் மூத்தவர்தான். ஆனாலும் என்னை அவர் அக்கா என்றே கூப்பிடுவார். நானும் அவரை அண்ணா என்றுதான் அழைப்பார். அவ்வளவு அன்பாக பேசுவார். பட்டினியோடு வேலை செய்யக்கூடாது என்று எங்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். அதுமட்டுமின்றி வீட்டில் அவர்களுக்கு என்ன சமைத்தாலும் அதை எங்களுக்கும் கொடுப்பார்.
எனது மகளுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்துகொடுத்தேன். அதற்கு மனோஜோ ஏன் சின்ன வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கிறீர்கள் என்று உரிமையுடன் கேட்டார். திருமணத்துக்கு அவரால் வர முடியவில்லை. பிறகு என்னிடம் என்னால் வர முடியவில்லை ஷூட்டிங் சென்றுவிட்டேன். நீங்கள் மகளை அழைத்துக்கொண்டு கண்டிப்பாக வீட்டுக்கு வாருங்கள் என்று சொல்லியிருந்தார். ஆனால் இப்போது அவர் இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











