Manoj: ஹீரோ டூ ரஜினிக்கு டூப்.. மனோஜின் நிறைவேறாத ஆசை.. மகள் நிறைவேற்றுவாரா?
சென்னை: பாரதிராஜாவின் மகனாக இருந்தாலும், மணிரத்னத்திடம் வித்தை கற்றவர் தான் நடிகர் மனோஜ். நாயகன், பாடகர், இசையமைப்பாளர் என பன்முக திறமைக்கொண்ட இவர், நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இயக்குநர் இமயத்தின் மகனாக இருந்தாலும், சினிமாவில் ஜெயிக்க அவர் பெரிய அளவில் போராடினார். ஆனால், கடைசி வரை அவரின் ஆசை நிறைவேறாமலே போனது தான் சோகத்தின் உச்சம்.
நடிகர் மனோஜ், ப்ளஸ் டூ படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சினிமாவுக்கு வந்தார். சினிமாவில் இயக்குநராக ஆசைப்பட்ட மனோஜை, பாரதிராஜா மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக சேர்த்துவிட்டார். அதன் பின் பம்பாய் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதன் பின், தனக்கு நடிப்பின் மீது ஆசை இல்லை என்றாலும், அப்பாவின் ஆசை அதுவாக இருந்ததால், 'தாஹ்மகால்' படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படத்தின் அனைத்து பாடல்களும் எவர்க்ரீன் ஸ்வீட் பாடல்களாக அமைந்தன. அந்த படத்தில் வரும் 'ஈச்சி எலுமிச்சி' பாடலை மனோஜ் பாடி இருந்தார்.

தாஜ்மஹால் ஹீரோ ரஜினிக்கு டூப்: தாஜ்மஹால் படத்துக்குப் பிறகு சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈரநிலம் நிறைய படங்களில் நடித்தார். அதன், பின் இவருக்கு பட வாய்ப்பு இல்லாததால், சினிமாவில் இவரை பார்க்க முடியாமல் போனது. இந்த கால கட்டத்தில் தான் ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதோடு மட்டுமில்லாமல், அந்த படத்தில், ரோபோக்கள் தலையை சுற்றும் காட்சியில் ரஜினிக்கு டூப் போட்டது மனோஜ் தான்.

ஒரு பெரிய இயக்குநரின் மகனாக இருந்தாலும், ரஜினிக்காக அந்த படத்தில் டூப் போட்டு இருந்தார் மனோஜ். அதன் பின் மாநாடு திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ஒரு ரோலில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து, விருமன் படத்தில் நடித்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு மார்கழி திங்கள் என்கிற படத்தை தனது தந்தையை வைத்தே இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

நிறைவேறாத ஆசை: மனோஜின் மிகப்பெரிய ஆசை, தன் அப்பா இயக்கி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற சிவப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என்பது தானாம். இரண்டாம் பாகத்தின் கதையை 13 ஆண்டுகளுக்கு முன் தயார் செய்து வைத்துவிட்டேன். ஆனால், அந்த படத்தின் ஸ்கிரிப்டை கையில் எடுக்கும்போதெல்லாம் ஏதேனும் ஒரு பிரச்சனை ஒரு தடங்கல் வந்து அதை எடுக்க முடியாமலே போய் விட்டது. இதற்காக நான் பல ஆண்டுகளாக போராடி விட்டேன் என்று பேட்டி ஒன்றில் வருத்தப்பட்டு பேசி இருந்தார். அவர் வாழ்க்கையில் சிவப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவேண்டும் என்பதே பெரும் ஆசையாக இருந்தது. ஆனால், அவரின் மரணத்தால் அந்த ஆசை கடைசி வரை நிறைவேறாமலே போய்விட்டது. அவரின் மகளுக்கும் சினிமா மீது ஈடுபாடு இருப்பதால், அப்பாவின் ஆசையை மகள் நிறைவேற்றுவாரா? என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
நீலங்கரையில் வைக்கப்பட்டுள்ள மனோஜின் உடலுக்கு நடிகர் விஜய், மணிரத்னம்,சுஹாசினி, நாசர், கருணாஸ், சத்யராஜ், எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் விக்ரமன் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











