Mansoor Ali Khan on Leo - சரக்கை முடிச்ச பிறகுதான் லியோவில் நடிப்பேன் - மன்சூர் அலிகான் தடாலடி
சென்னை: Mansoor Ali Khan on Leo (லியோ குறித்து மன்சூர் அலிகான்) சரக்கை முடித்த பிறகுதான் விஜய்யின் லியோவில் நடிப்பேன் என மன்சூர் அலிகான் தெரிவித்திருக்கிறார்.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு படங்களையுமே ஹிட் படங்களாக கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஒரு இயக்குநர் நான்கு படங்களையும் ஹிட் படங்களாக கொடுப்பது அரிதிலும் அரிதாக மட்டுமே நடக்கும் என்பதால் லோகேஷ் கனகராஜ் கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கிறார். அவரது இயக்கத்தில் நடிப்பதற்கு பல நடிகர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

விஜய் லோகேஷ் கூட்டணி: விஜய் கடைசியாக வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்தார். பைலிங்குவலாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான அந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து தனது கேரியரில் மெகா ஹிட்டுகளில் ஒன்றான மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுடன் இணைந்திருக்கிறார் விஜய். இவர்கள் இருவரும் இரண்டாவது முறை இணையும் படத்துக்கு லியோ ப்ளடி ஸ்வீட் என்று பெயரிடப்பட்டுள்ளது.
லியோ ப்ரோமோ: விக்ரம் படம் போலவே இந்தப் படத்திற்கான டைட்டிலையும் ப்ரோமோவுடன் வெளியிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். பான் இந்தியா படமாக உருவாகும் லியோவில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மாத்யூ தாமஸ், மிஷ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
சென்னையில் ஷூட்டிங்: இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீருக்கு சென்றது படக்குழு. அங்கு விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்துவந்தது. கிட்டத்தட்ட 2 மாதங்கள் அங்கு முகாமிட்டிருந்த படக்குழு சில வாரங்களுக்கு முன்பு ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பியது. தற்போது லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
லியோவில் மன்சூர் அலிகான்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகானின் தீவிர ரசிகர் ஆவார். அவரது கேரியரில் பெரும் திருப்புமுனையாக அமைந்த படமான கைதி படத்தின் கதையை மன்சூர் அலிகானுக்காகத்தான் எழுதினார் லோகேஷ். கடைசியாக அவர் இயக்கிய விக்ரம் படத்தில்கூட மன்சூர் அலிகானின் ஆடிய பாடலை வைத்திருப்பார்.

இப்படி மன்சூரின் தீவிரமான ரசிகர் லோகேஷ். எனவே அவரது படத்தில் எப்போது மன்சூர் நடிப்பார் என கேள்வி எல்லோரிடமும் இருந்தது. இதனையடுத்து லியோ படத்தில் மன்சூருக்காக ஒரு கேரக்டர் எழுதியிருப்பதாக தெரிவித்து கமிட்டாக்கினார் லோகேஷ்.
சரக்கை முடித்துவிட்டு லியோ: லியோ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவரும் சூழலில் மன்சூர் அலிகானின் போர்ஷன் என்ன ஆனது என்பது குறித்து தெரியாமல் இருந்தது. இந்நிலையில் பட தொடக்க விழா ஒன்றில் கலந்துகொண்ட மன்சூர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசுகையில், "இன்னமும் நான் லியோ படத்தில் நடிக்கவே ஆரம்பிக்கவே இல்லை. இப்போது சரக்கு என்ற என்னுடைய படத்தில் நடித்துவருகிறேன்.

சரக்கை முடித்துவிட்டுத்தான் லியோவுக்கு போகப்போகிறேன். காஷ்மீர் ஷெட்யூல் முடித்த பிறகுதான் எனக்கான ஷூட்டிங் என ஏற்கனவே கூறியிருந்தனர். அதற்காக என்னிடம் நிறைய நாள்கள் கால்ஷீட்டும் வாங்கியிருக்கிறார்கள். விஜய்யுடன் ஏற்கனவே 10 படங்களில் நடித்திருக்கிறேன். மீண்டும் அவருடன் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியையே கொடுக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











