Mansoor Ali Khan - ஜெயிலரில் ஒரு வெங்காயமும் இல்லை.. தமன்னாவால்தான் படம் ஓடுச்சு.. மன்சூர் அலிகான் அதிரடி
சென்னை: Mansoor Ali Khan (மன்சூர் அலிகான்) ஜெயிலர் படத்தில் ஒரு வெங்காயமும் இல்லை. தமன்னாவால்தான் படம் ஓடியது என்று மன்சூர் அலிகான் தெரிவித்திருக்கிறார்.
மன்சூர் அலிகான் 90களில் பிரபல வில்லனாக வலம் வந்தவர். முதல் படத்திலேயே வீரப்பன் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பில் அதகளம் செய்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தனது வில்லத்தனமான நடிப்பால் பலரையும் ஆச்சரியப்படுத்தினார். ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இருந்தாலும் தனது வெளிப்படையான பேச்சு மற்றும் பேட்டியின்போது அவர் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றால் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்தார்.

லோகேஷ் கனகராஜ் மன்சூர் ரசிகர்: தற்போது மோஸ்ட் வாண்டட் இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜும் மன்சூர் அலிகானுக்கு ரசிகர். தன்னுடைய கைதி படத்தின் கதையை மன்சூர் அலிகானை மனதில் வைத்துதான் அவர் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விக்ரம் படத்திலும் மன்சூர் அலிகான் நடனம் ஆடியிருந்த பாடலையும் இடம்பெற செய்திருந்தார்.
லியோவில் மன்சூர்: தொடர்ந்து மன்சூர் அலிகானை பற்றி மேடையில் பேசிவந்த லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தில் மன்சூருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். படத்தில் விஜய்யின் லியோ கேரக்டரை ஓபன் செய்யும் நபராக தோன்றி நடித்திருக்கிறார். குறிப்பாக இலையை வைத்து பீப்பி ஊதுவது போன்று அவரது இண்ட்ரோ காட்சியை லோகேஷ் அமைத்திருந்தது தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது.
சரக்கு: இந்தச் சூழலில் மன்சூர் அலிகான் சரக்கு என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை ஜெயக்குமார் ஜே இயக்கியிருக்கிறார். படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. நிலவரம் இப்படி இருக்க படத்தை சென்சாருக்கு அனுப்பினார் மன்சூர் அலிகான். படத்தை பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் ஏகப்பட்ட கட்டுகளை சொல்லியிருக்கிறார்கள். இதனால் டென்ஷனான மன்சூர் அலிகான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர் சந்திப்பு: செய்தியாளர் சந்திப்பில் பேசிய மன்சூர் அலிகான், "நான் என் இடத்தை விற்று சரக்கு படத்தை எடுத்திருக்கிறேன். படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், அம்பானி, அதானி பெயரை பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள். அதேபோல் டெல்லி என்ற பெயரையும், ஊறுகாய் மாமி என்ற வார்த்தையையும் பயன்படுத்தக்கூடாது என்றார்கள். திருநங்கை பற்றிய நல்ல கருத்து சொல்லும் பாடலை பார்த்து இதில் கவர்ச்சி அதிகம் இருக்கிறது இதையும் எடுத்து விடுங்கள் என்றார்கள்.
ஜெயிலரில் ஒரு வெங்காயமும் இல்லை: ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் தமன்னா தொடையை காண்பித்து ரா ரானு அழைத்தாரே. அதைவிடவா நான் மோசமாக எடுத்தேன் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அது வேற படம் சார் என்றார்கள். ஏன் தமன்னா அவ்வளவு கவர்ச்சியை காட்டும்போது சென்சாருக்கு தெரியவில்லையா. அப்போது வாயை பிளந்து பார்க்கிறார்கள். ஜெயிலர் படத்தில் ஒரு வெங்காயமும் இல்லை. தமன்னா ஆடிய அந்தப் பாடலால்தான் படமே ஓடியது. சரக்கு படம் நல்ல நோக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படம். அதனை மக்களிடம் பத்திரிகையாளர்களாகிய நீங்கள்தான் சேர்க்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











