Vijay Vs Mansoor Ali Khan: அப்போ அந்த வாய்.. இப்போ இந்த வாய்.. தவெக விஜய்க்கு சவால் விட்ட மன்சூர் அலி கான்
சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர், இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கு மாற்று நாங்கள் தான் என்றும், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையில்தான் போட்டியே என்று கூறி வருகிறார். இப்படி இருக்கும்போது, நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதாவது அவர் பேசுகையில், " நான் ஒரு நடிகன். நான் ஏதோ இன்றைக்கு போராடவில்லை, கடந்த 1998 ஆம் ஆண்டு கவர்னர் மாளிகை எதற்கு 600 ஏக்கரில் இருக்கிறது, அங்கு நீச்சல் குளம், மல்யுத்த வீரர்களுக்கு மைதானங்கள் கட்ட வேண்டும் என்று போராடியதற்கு சுமார் 35 நாட்கள் சிறையில் இருந்துள்ளேன். நான் பல கட்சிகளில் இருந்திருக்கிறேன். ஆனால் நான் ஒருவரை ஏமாற்றிவிட்டேன் என்று என் மீது எந்த புகாரும் இல்லை. மனதில் பட்டதை பேசுகிறேன். நடிக்க வாய்ப்பு கொடுத்தால் கொடுங்க, இல்லை என்றாலும் கவலையில்லை. எனக்கு நம் நாட்டை நாசமாக்கும் எஸ்.ஐ.ஆர் தடுக்கப்படவேண்டும்.

ஒரு ஆணியும் புடுங்க முடியாது: பாஜகவை ஆதரிக்கும், அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் பாசிச கட்சிகள், அவர்களால் தமிழ்நாட்டிற்கு பலன் இல்லை. 2026ஆம் ஆண்டு திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும். நானே அக்கட்சிக்காக வேலை செய்தாலும் செய்வேன். வேறு வழி இல்லை. என்னுடைய போராட்டமும் பிரச்சாரமும் தரையில் கால் பதியும். விஜய் போல வானத்திலேயே சுற்றிக் கொண்டு இருக்க மாட்டேன். தனது காலைத் தூக்கிக் காட்டி, இந்த கால் தரையில் பட வேண்டும். அடிமட்ட மக்களைச் சென்று சந்திக்க வேண்டும். மார்க்கெட்டுகள், வயல்வெளிகள், சாலைகளில் இந்த கால் பட வேண்டும்.
சொம்பு: வானத்தில் உலாத்திக் கொண்டு, வானத் தூதுவர்களாக இருக்க கூடாது. விமானத்திலேயே சென்று விட்டு விமானத்திலேயே வந்தால், பணக்காரனுக்கு தான் சொம்பு அடிப்பார்கள். பணக்காரனுக்கு தான் பல்லாக்கு தூக்குவார்கள். பேரறிஞர் அண்ணா எப்படி இருந்தார். ஆனால் இன்றைக்கு தலைவர் என்று சொல்லிக் கொண்டு வருபவர் எல்லாம் அப்படியா இருக்காங்க? ஆனால் விஜய் இப்படி இருந்தால் ஒன்றும் பண்ண முடியாது, ஒரு ஆணியும் புடுங்க முடியாது.

அரசியல் களம்: அரசியல் களத்தில் விஜய் எனக்கு இணையானவர் கிடையாது. அவரைப் பார்த்து நான் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. இது மட்டும் இல்லாமல் கரூர் துயரம் குறித்து நான் பேசியதற்கு விஜய் எனக்கு ஒரு போன் கூட செய்து பேசவில்லை. விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று வந்துள்ளார், செய்யட்டும். நிறைய பணம் வைத்திருக்கிறார். நிறைய செலவு செய்யட்டும்" என்று பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











