பெரிய பட்ஜெட்.. ராமாயணம், மகாபாரதத்தை வைத்து இத்தனை படங்கள் ரெடியாகுதா?.. அட அதுதான் காரணமா?
சென்னை: கடந்த சில ஆண்டுகளாகவே நாடு முழுவதும் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை மையப்படுத்தி பல படங்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில், மேலும், பல படங்கள் இந்த இதிகாசங்களை மையப்படுத்தி உருவாகி வருவது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
பல படங்களில் இந்த கதைகளை பார்த்து விட்ட போதிலும் புதிது புதிதாக இயக்குநர்கள் தொடர்ந்து இந்த கதைகளையே ஏன் எடுக்கின்றனர். புதிதாக யோசிக்கக் கூட இயக்குநர்களுக்கு நேரம் இல்லையா? ஹாலிவுட்டில் உருவாக்குவது போல புதிய பிரம்மாண்ட கதைகளை உருவாக்கலாமே சைஃபை படங்கள், சூப்பர் ஹீரோ படங்களை உருவாக்கலாமே என்றெல்லாம் ரசிகர்கள் கோரிக்கை வைத்தாலும் இயக்குநர்கள் மும்முரமாக ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளை வைத்து பிரம்மாண்ட படங்களை எடுத்தே தீருவோம் என இறங்கி உள்ளனர்.

ராமாயணம்: கடந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் என ராமாயணம் கதை தான் படமாக்கப்பட்டது. இந்நிலையில், பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி ரன்பீர் கபூர், சாய் பல்லவி, விஜய்சேதுபதியை வைத்து ராமாயணம் எனும் டைட்டிலில் ஒரு படத்தை உருவாக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஆண்டு அந்த படத்தின் சூட்டிங் தொடங்கும் என்கின்றனர்.
கர்ணன்: சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் படத்தை பார்த்தே தமிழ் சினிமா ரசிகர்கள் அந்த கதையை நன்கு கரைத்து குடித்துள்ளனர். சியான் விக்ரம் நடிப்பில் மஹாவீர் கர்ணா உருவாகப்போவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், தற்போது பாலிவுட் இயக்குநர் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் சூர்யா, ஜான்வி கபூர் நடிப்பில் மகாபாரதத்தின் கிளை கதையான கர்ணா உருவாகப்போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெய் ஹனுமான்: தெலுங்கில் இந்த ஆண்டு பொங்கலுக்கு தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியான ஹனுமான் படமும் ராமாயண கதையை மையமாக கொண்டு வெளியான படம் தான். அந்த படம் 300 கோடி வசூல் வேட்டை நடத்திய நிலையில், அடுத்து ஜெய் ஹனுமான் படம் உருவாக காத்திருக்கிறது.

இரண்யகசிபு: ராணா டகுபதி நடிப்பில் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கதையில் பிரம்மாண்டமாக தெலுங்கில் இரண்யகசிபு படம் உருவாகி வருகிறது. இந்த படம் விஷ்ணு அவதாரமான நரசிம்ம அவதாரத்தில் ஹிரண்யகசிபு எனும் அரக்கனை கொல்லும் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

கல்கி 2898 ஏடி: ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை தாண்டி விஷ்ணு பகவானின் மகிமைகளை பேசும் படங்கள் அதிகம் உருவாகி வருகின்றன. பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அமிதாப் பச்சன், பசுபதி நடிப்பில் உருவாகி வரும் கல்கி திரைப்படத்தின் டைட்டில் கல்கி அவதாரத்தை குறிக்கும் நிலையில், மகாபாரத டச்சும் படத்தில் இருப்பதாக நாக் அஸ்வின் பேட்டி ஒன்றில் கூறி மேலும், பில்டப்பை கிளப்பி உள்ளார்.

என்ன காரணம்?: இப்படி வரிசையாக இந்து மதத்தை தழுவிய ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை மையமாக வைத்து படங்கள் உருவாக காரணமே பாக்ஸ் ஆபிஸில் இந்தி பெல்ட்டில் அந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருப்பது தான் என்கின்றனர். மேலும், இதுபோன்ற படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்யவும் பலரும் ரெடியாக உள்ள நிலையில், இயக்குநர்கள் அதை டார்கெட் வைத்து படங்களை உருவாக்கி வருகின்றனர் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











