திடீரென பின் வாங்கும் தியேட்டர்கள்.. எதற்கும் துணிந்தவனுக்கு எதிரியாக மாறிய வலிமை.. என்ன நடக்குது?
சென்னை: வலிமை திரைப்படம் இரண்டு வாரங்களும் நல்லா ஓடுவதாக கூறி எதற்கும் துணிந்தவன் படத்துக்கு தியேட்டர்களை ஒதுக்க திடீரென பல திரையரங்குகளும் தமிழ்நாடு முழுவதும் பின் வாங்கி வருவது சூர்யா ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சென்னை, கேரளா உள்ளிட்ட திரையரங்குகளில் செம புக்கிங் ஆகி வரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம், பிற மாவட்ட திரையரங்குகளில் வெளியாக முடியாத நிலைக்கு தள்ளப் பட்டிருப்பதாக கூறுகின்றனர்.
வலிமை படத்தை இதற்கு காரணம் காட்டினாலும், அரசியல் ரீதியான அழுத்தம் தான் எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிட தியேட்டர்கள் மறுக்க காரணம் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

நாளை ரிலீஸ்
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ம் தேதியான நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் திரைப்படங்களை தனது நிறுவனமான 2டியில் தயாரித்த சூர்யா அதனை அமேசான் பிரைம் ஒடிடியில் நேரடியாக வெளியிட்டார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்றதுமே நிச்சயம் படம் தியேட்டரில் தான் வெளியாகும் என ரசிகர்கள் சந்தோஷமடைந்தனர்.

பாமக பிரச்சனை
எதற்கும் துணிந்தவன் படத்தை தியேட்டர்களில் வெளியிட விடாமல் பாமக மற்றும் வன்னியர் சங்கங்கள் பிரச்சனை செய்வதாக தகவல்கள் வெளியான நிலையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் நேற்று அதற்கு எதிராக கண்டனத்தையும் தெரிவித்து இருந்தது. ஜெய்பீம் படத்தில் வன்னியர்களுக்கு எதிராக கருத்துக்கள் இருந்ததாக மிகப்பெரிய பிரச்சனை வெடித்த நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிட விடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.

பின் வாங்கும் தியேட்டர்கள்
இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தை ரிலீஸ் பண்ண முடியாத சூழலுக்கு பல தியேட்டர்கள் தள்ளப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், உமா ராஜேந்த்ரா சினிமாஸ் உள்ளிட்ட பல திரையரங்க உரிமையாளர்கள் எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிட பல முயற்சிகளை மேற்கொண்டோம், ஆனால், கடைசி நேரத்தில் திரையிட முடியவில்லை என பின் வாங்கி உள்ளன.

வில்லனான வலிமை
பிப்ரவரி 24ம் தேதி வெளியான அஜித்தின் வலிமை திரைப்படம் 2 வாரங்கள் ஓடியிருக்கும் நிலையில், 3வது வாரமும் தியேட்டரில் அந்த படம் ஓடினால் தான் தியேட்டர்களுக்கு லாபம் கிடைக்கும் என்று சில திரையரங்கள் எதற்கும் துணிந்தவன் படத்தை வாங்க முடியாது என எண்ட் கார்டு போட்டு வருகின்றன.

திடீர் திருப்பம்
இதுவரை வலிமை திரைப்படத்திற்கு இல்லாத ஆதரவு புதிய படமான எதற்கும் துணிந்தவன் படம் வரும் நிலையில், திடீரென கிளம்பி இருப்பதற்கு பின்னணியில் பெரும் சூழ்ச்சி இருப்பதாக சூர்யா ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் ஆன பின்னர், அனைத்து தியேட்டர்களும் அந்த படத்தை வாங்க போட்டி போடும் என்று சன் பிக்சர்ஸ் மற்றும் எதற்கும் துணிந்தவன் படக்குழு இந்த விவகாரத்தில் பொறுமையுடன் காத்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஆர்ஆர்ஆர் படத்துக்கு
மார்ச் 11ம் தேதி வெளியாக உள்ள பிரபாஸின் ராதே ஷ்யாம் மற்றும் மார்ச் 25ம் தேதி வெளியாகவுள்ள ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்களுக்கு தியேட்டர்களை ஒதுக்குவதில் எந்தவொரு சிக்கலும் இல்லையென்றும், மேலும், அடுத்த இரு வாரங்களில் எதற்கும் துணிந்தவன் படம் எல்லா தியேட்டர்களில் இருந்தும் தூக்கப்பட்டு ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் நடிப்பில் உருவாகி உள்ள ஆர்ஆர்ஆர் படத்தை திரையிடவும் தியேட்டர்களுக்கு மறைமுக உத்தரவுகள் பறந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











