வயிற்றுப் பசிக்கு நீங்க பார்க்கிற வேலை தெரியாதே.. கொரோனா லாக்டவுனால் கருவாடு வியாபாரியான நடிகர்!
மும்பை: கொரோனா, கடும் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதால், நடிகர் ஒருவர் கருவாடு வியாபாரியாக மாறி இருக்கிறார்.
Recommended Video
உலகம் முழுவதும் மிரட்டிக்கொண்டிருக்கும் கொரோனாவுக்கு பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு கோடியை கடந்துள்ளது. லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தொழிலாளர்கள்
இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் கடுமையாக இருக்கிறது. இந்த தொற்றால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதைக் கட்டுப்படுத்த லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டாலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக, தினசரி வேலை பார்த்து சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் வாழ்க்கை பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.

மளிகை கடை
அவர்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சினிமா மற்றும் சின்னத்திரை தொழிலாளர்கள் மற்றும் துணை, நடிகர், நடிகைகள் கடும் பொருளாதார சிக்கலில் உள்ளனர். இந்நிலையில் சிலர் கொரோனா முடியும் வரை தங்கள் வாழ்வாதாரத் துக்காக, தொழிலை மாற்றியுள்ளனர். இந்தி பட துணை நடிகர் ஒருவர் டெல்லியில் பழங்கள் விற்று வருகிறார். சிலர் மளிகை கடை நடத்தி வருகின்றனர்.

கருவாடு விற்பனை
இப்போது ஒரு நடிகர் கருவாடு விற்பனை செய்து வருகிறார். அவர் பிரபல மராத்தி நடிகர் ரோஹன் பட்னேகர். சில படங்களுக்கு ஸ்கிரிப்ட்டும் எழுதி இருக்கிறார். பாபாசாகேப் அம்பேத்கர் என்ற டிவி தொடரில் நடித்ததன் மூலம் மராத்தி மக்களிடையே பிரபலமடைந்தவர் இவர். குடும்பத்தில் இவர் மட்டுமே சம்பாதித்து வருவதால், வேறு வழியில்லாமல் கருவாடு வியாபாரம் செய்து வருகிறார்.

இடம் கிடைக்குமா?
அவர் கூறும்போது, 'லாக்டவுனுக்கு முன்பு வரை எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. 3 மாதத்துக்கு பிறகு 35 பேரை வைத்து மட்டுமே படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்தனர். அதில் எனக்கு இடம் கிடைக்குமா என்பது என்னை அலைகழித்தது. பிரபலமானவர்களுக்கு மட்டும்தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், நண்பர்களுடன் ஆலோசித்தேன். பிறகு கருவாடு வியாபாரம் செய்ய தொடங்கினேன்.

வெட்கம் இல்லை
எனது தந்தை இதை செய்திருக்கிறார் என்பதால் எனக்கு கொஞ்சம் அனுபவம் இருக்கிறது. அதனால் இதை விற்க ஏன் தயங்க வேண்டும் என்று யோசித்தேன். பிறகு விற்கத் தொடங்கினேன். நடிகராக இருந்துகொண்டு கருவாடு விற்பதில் எந்த வெட்கமும் இல்லை. வயிற்றுப் பசிக்கு உங்கள் வேலை பற்றி தெரியாதே?' என்று கேட்கிறார் ரோஹன்.

தற்கொலை எண்ணம்
அதே போல, சிலர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்வது பற்றி அவர் கூறும்போது, நானும் மன உளைச்சலில் இருந்தேன். தற்கொலை எண்ணமும் வந்தது. ஆனால், அதில் இருந்து என்னை மீட்டு கொண்டேன். போராடுவோம் என்று உறுதிகொண்டேன். போராடிக் கொண்டிருக்கிறேன். இதில் இருந்து விரைவில் மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்கிறார் தன்னம்பிக்கையுடன் ரோஹன்.


Click it and Unblock the Notifications











