சுற்றுலா சென்றுவிட்டு திரும்பும் போது விபத்து... பிரபல பாடகி மரணம்.. உயிருக்கு போராடும் கணவர்!
Recommended Video
மும்பை: பிரபல மராத்தி பாடகி கீதா மலி கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் அவரது கணவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.
மராத்தி படங்களில் பாடல்கள் பாடி பிரபலமானவர் கீதா மலி. இவர் தன்னுடைய கணவருடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். சுற்றுலாவை முடித்துவிட்டு அண்மையில் தான் அவர் மும்பை திரும்பினார்.

தனது சொந்த ஊரான நாசிக்கிற்கு கணவருடன் காரில் சென்றார். கணவனும், மனைவியும் மும்பை - ஆக்ரா நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அதிகாலை 3 மணியளவில் லாகே பாதா என்ற இடத்தில் அவர்கள் சென்ற கார், சாலையோரம் நின்றிருந்த கன்டெயினர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கீதாவும் அவரது கணவர் விஜய்யும் கடுமையான காயம்பட்டனர். இருவரையும் போலீசார் மீட்டு, அருகில் உள்ள ஷாபூர் கிராமப்புற மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கீதா உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் அவரது கணவர்.
வெளிநாட்டுக்கு ஜாலியாக சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய பாடகி கீதா, கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் மராத்திய திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











