மஞ்சணத்தி.. இளையராஜா - மாரி செல்வராஜ் இணையும் படம்.. அறிவிப்பு வீடியோவே மெய் மறக்க செய்யுது
சென்னை: கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் மாரி செல்வராஜ். இதுவரை சந்தோஷ் நாராயணன், ஏ.ஆர்.ரஹ்மான், நிவாஸ் கே பிரசன்னா இசையில் படம் இயக்கிய அவர்; முதன்முதலாக இசைஞானி இளையராஜாவுடன் சேர்ந்திருக்கிறார். அந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ இப்போது வெளியாகியிருக்கிறது. அந்த காணொலியிலேயே இளையராஜா தன்னுடைய இசையால் ரசிகர்களை மெய் மறக்க செய்திருக்கிறார்.
ராமிடம் உதவி இயக்குநராக இருந்த மாரி செல்வராஜ் அடிப்படையில் ஒரு எழுத்தாளர். அவர் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி; அது வெளியான பிறகு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் புருவம் உயர்த்தியது. கோலிவுட்டுக்கு பல வருடங்கள் கழித்து ராவான அதேசமயம் மிகச்சிறந்த படைப்பாளி கிடைத்துவிட்டார் என்று எல்லோருமே சொன்னார்கள். ஏன்? தமிழ் சினிமா நிலத்தில் புதிய விதைகளை விருட்சமாக்கிய பாரதிராஜாகூட பரியேறும் பெருமாள் படத்தை பார்த்து பிரமித்துவிட்டார்.

தவிர்க்க முடியாத இயக்குநர் மாரி செல்வராஜ்: முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் இயக்கிய கர்ணன், மாமன்னன், வாழை உள்ளிட்ட படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அவற்றில் கர்ணன் படம் மட்டும் விமர்சனத்தை சந்தித்தது. ஆனால் மாமன்னன், வாழை ஆகிய படங்களும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி தவிர்க்க முடியாத இயக்குநராக அவரை மாற்றிவிட்டது. அவர் இயக்கும் படம் என்றாலே கண்டிப்பாக ஏதோ ஒரு சமூகம் சார்ந்த விஷயம் இருக்கும் என்பதை பைசன் படமும் உணர்த்தியது. விளையாட்டு ஜானரில் அந்தப் படம் வந்தாலும் அதிலும் சமூக நீதி அரசியல் உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெற்றிருந்தன.
50 கோடி ரூபாய் வசூல்: அதேபோல் விமர்சன ரீதியாக மாரியின் படங்கள் எப்போதும் டாப் ரேங்க்கில் இருப்பவை. ஆனால் வணிக ரீதியாக பெரிதாக போகாது என்ற பேச்சையும் பைசன் அடித்து துவம்சம் செய்தது. மொத்தம் அந்தப் படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. இதற்கிடையே தெற்கிலிருந்து வந்த மாரி செல்வராஜ்; எப்போது இளையராஜாவுடன் சேர்ந்து பணியாற்றப்போகிறார் என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது. அவரிடம் கேட்கப்பட்டபோது கூட, 'எனக்கும் அந்த ஏக்கம் இருக்கிறது. அவருடன் பணியாற்றுவதற்கு இன்னமும் நான் பக்குவப்பட வேண்டும்' என கூறியிருந்தார்.
ராஜாவுடன் கூட்டணி: சூழல் இப்படி இருக்க இளையராஜா - மாரி செல்வராஜ் கூட்டணி இப்போது அமைந்திருக்கிறது. அதுதொடர்பான அறிவிப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் இளையராஜாவின் ஸ்டூடியோவுக்குள் செல்லும் மாரி செல்வராஜ், ராஜாவை சந்திக்கும் காட்சிகள், ராஜா அமைக்கும் ட்யூன்களை மெய் மறந்து ரசிக்கும் காட்சிகள் எல்லாம் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் இசைஞானி காகிதத்தில், 'மஞ்சணத்தி' என்றும் எழுதியிருக்கிறார். அதுதா படத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டிப்பாக சம்பவம்தான்: நிச்சயம் இந்தப் படமும், இதில் இளையராஜா அமைக்கப்போகும் இசையும் காலத்துக்கும் நிற்கும் என்றே தெரிகிறது. ஏனெனில் மாரி செல்வராஜ் தன்னுடைய படங்களில் தெற்கத்தி இசையையும், ஒப்பாரி வகை இசையையும் அதிகம் பயன்படுத்தி அதன் வழியாக கதை சொல்பவர். இளையராஜாவுக்கு அது இரண்டுமே கை வந்த கலை. எனவே இளையராஜாவின் இசையும், மாரியின் காட்சியமைப்பும், கதையும் சேர்ந்து ரசிகர்களை புதிய பரவசத்துக்கு அழைத்து செல்லும் என்று உறுதியாக நம்பலாம்.


Click it and Unblock the Notifications
