ஏன்டா நடித்தோம்னு Feel பண்ணிட்டு இருக்காங்க.. வாழை பட சிறுவர்கள் குறித்து மாரி செல்வராஜ் பளீச்
சென்னை: கடந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிக பாராட்டுகளையும் மக்கள் ஆதரவையும் வணிக ரீதியாக பெற்று மாபெரும் வெற்றிப் படமாக மாறிய படம் வாழை. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை அவரது மனைவி திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் இணைந்து தயாரித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். படம் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால், மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாரி செல்வராஜ் படமாக்க பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளார். மேலும் எக்காரணம் கொண்டும் இந்த படத்தை தனது பெற்றோர்கள் பார்த்து விடக்கூடாது என்பதில் உறுதியாகவும் இருந்துள்ளார். கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கி முடித்த பின்னர் சுமார் 10 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தப் படத்தின் திரைக்கதை அமைத்து, இயக்கியது மட்டும் இல்லாமல், படத்தில் சில பாடல்களையும் எழுதியுள்ளார். குறிப்பாக கிளைமேக்ஸில் வரும் ஒப்பாரி பாடலை எழுதியிருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

வாழை: படம் வணிக ரீதியாக மாபெரும் வெற்றிப் படமாக ஓடியது. திரைத்துறையைச் சேர்ந்த பல இயக்குநர்கள், நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் படத்தை பாராட்டினார்கள். இயக்குநர் பாலா தொடங்கி பலரும் படம் பார்த்துவிட்டு அழுதார்கள். இப்படியான நிலையில் படம் பாராட்டுகளைப் பெற்றது. படம் பல விருதுகளை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக படத்தில் சிவனைந்தான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த, சிறுவனை பலரும் பாராட்டினார்கள்.

பயம்: இந்நிலையில் மாரி செல்வராஜ்க்கு அண்மையில் விருது வழங்கப்பட்டது. அந்த நிகழ்வில், அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக வாழை படத்தில் நடித்த இரண்டு சிறுவர்களும் வரவழைக்கப்பட்டு இருந்தார்கள். இப்படியான நிலையில், இவர்கள் இருவரையும் பார்த்த மாரி செல்வராஜ் அவர்கள் இருவர் குறித்தும் தனது அபிமானத்தை பகிர்ந்து கொண்டார். " எனக்கு பயமாக உள்ளது. அவர்கள் என்ன தவறு செய்தாலும் நான் மாட்டிக் கொள்வேன். அவர்கள் தவறு செய்ய மாட்டார்கள், ஆனால், இந்த சமூகம் தவறாக புரிந்து கொண்டு விடும். அவர்களுக்கு என ஒரு வயது உள்ளது, ஒரு வாழ்க்கை உள்ளது. இப்போது அவர்களுக்கு கிடைத்துள்ள இந்த வெளிச்சத்தை வைத்து சாதாரண வாழ்க்கையை வாழ நினைப்பான்.

கஷ்டப்படுகிறார்கள்: ஆனால், எது செய்தாலும் சரியாக இருங்கள், படிப்புதான் முக்கியம் என்று கூறியுள்ளேன். பொறுப்புகள் அதிகம் உள்ளது. நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் வாழ சொல்லிக் கொடுத்துள்ளோம். அந்த வாழ்க்கையை வாழ கஷ்டப்படுகிறார்கள். ஏன்டா வாழைப் படத்தில் நடித்தோம் என வருத்தப் பட்டுக் கொண்டு உள்ளார்கள். ஒரே கண்டிஷனில் வாழவேண்டி உள்ளது எனக் கூறுகிறார்கள்" எனக் கூறினார். இவரது இந்தப் பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











