அடங்காத விஜய் ரசிகன்...ரஜினிக்காக எழுதிய கதையில் தனுஷா?... ஹேப்பி பர்த்டே மாரி!
சென்னை: பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது அனைத்து படைப்புகளிலும் சமூகநீதிக்கான அரசியல் இருக்கும் என அவரே தெரிவித்துள்ளார். கர்ணன் மாமன்னன், வாழை என தொடர் வெற்றிகளை பதிவு செய்துள்ள மாரி செல்வராஜ் இன்று அவர் தனது 41ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
உதவி இயக்குநர்: இயக்குநர் மாரி செல்வராஜ் நெல்லை மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இவர் கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சென்னைக்கு வந்தார். பின்பு, சென்னைக்கு வந்து, இயக்குநர் ராமின் அலுவலக உதவியாளராக இருந்து பின்னர் 'கற்றது தமிழ்' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார். மாரி செல்வராஜ் செல்லும் எல்லா மேடைகளிலும் இயக்குநர் ராமை பற்றி உயர்வாகவே பேசியுள்ளார்.

எழுத்தாளர்: மறக்கவே நினைக்கிறேன், தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், காட்டுப்பேச்சிகள் காடுகளில் வசிப்பதில்லை என்ற சிறுகதை என இலக்கியம் சார்ந்தும் மாரி செல்வராஜ் பயணித்து வருகிறார். எழுத்தின் மீது காதல் கொண்டதோடு, ஒரு கதையின் முடிவை இப்படித்தான் இருக்கும் என்ற தீர்மானிக்கும் இயக்குநராகவும், எழுத்தாளராகவும் மாரி செல்வராஜ் பிரதிபலிக்கிறார். பரியேறும் பெருமாள் படத்தில் இடம்பெற்ற பல கதாப்பாத்திரங்கள் மக்களாக வாழ்ந்து மடிந்தவர்கள், உண்மை கதையை எடுத்து வெற்றி கண்டுள்ளார்.
ஜோ மீது காதல்: பரியேறும் பெருமாள் படத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர் என்பதற்கான உதாரணம் இரண்டு டீ டம்ளர்கள் தான். சமூகத்தில் நடக்கும் சாதிய கொடுமைகளை அழகாக வைத்திருப்பார். அப்படத்தில் ஜோவை காதலியா, தோழியா என்பதை தெரிந்துகொள்ள பக்குவம் இல்லாத நேரத்திலும் கூட பரியன் ஜோவை எந்த இடத்திலும் விட்டுகொடுத்ததில்லை. ஜோவுக்கும் பரியனுக்கும் சண்டை வரும் போது கூட புரோபசரிடம் மேடம் அவ என் ஜோ, நா கோபபடக்கூடாதா, சண்டை போடக்கூடாதா, நாய், நரி, சிங்கத்திற்கு இருக்கும் உரிமையை போல நானும் இருக்க விரும்புகிறேன் என தன் வலிகளை சொல்லால் கடத்தியிருப்பார் மாரி செல்வராஜ். முதல் காதலை யாராலும் மறக்க முடியாது அப்படித்தான் ஜோவை நெஞ்சில் சுமந்து எழுத்தாகவும் வாழ வைத்துள்ளார் மாரி செல்வராஜ்.
வாள்வீச்சு: முதல் படம் பொறுமையாக சமூகத்திற்கு பாடம் எடுத்தாலும், அவரது இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் வாள்வீசி நின்று வெற்றி வாகை சூடினார் மாரி செல்வராஜ். இப்படத்தில் இடம்பெற்ற தட்டான் தட்டான் பாடலும், முதிர்ந்த காதல் காட்சியும் தென்றல் போல வருடி சென்றிருக்கும். கர்ணன் படத்திற்கு சர்ச்சைகளும் எழுந்தன. மாரி செல்வராஜ் படம் வெளியானால் அது ஒரு விவாதத்தை கிளப்பும் வகையில் இருந்தன. படத்தில் இடம்பெற்ற குறியீடுகளை வைத்து விவாதங்கள் நடந்தன.
மாமன்னன்: உதயநிதிக்கு கடைசி படமாகவும், வடிவேலுவுக்கு கம்பேக் கொடுத்த படமாக இருந்தது. மாமன்னன். இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையால் ரசிகர்களை கட்டி போட்டார். நெஞ்சமே நெஞ்சமே பாடல் பட்டி தொட்டியெங்கும் காதலர்களின் தாலாட்டு பாடலாக மாறியது. இயக்குநர் செல்வராகவன் இப்பாட்டை நினைவுபடுத்தி இந்த ஆண்டின் சிறந்த பாட்டு என்றும் புகழாரம் சூட்டினார். இப்படி பலரும் ரீல்ஸ் போட்டு கொண்டாடினர். அது ஒரு பக்கம் இருந்தாலும், பகத் பாசிலின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டன. வில்லனாக மிரட்டியிருப்பார். வடிவேலுவின் நடிப்பை பார்த்து வியந்து ரசித்தனர் ரசிகர்கள். அரசியல் தளத்திலும் மிகப்பெரிய பேசுபொருளானது. மாரிசெல்வராஜ் ஹாட்ரிக் வெற்றியை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் ரசிகன்: விஜயின் தீவிர ரசிகனான மாரி செல்வராஜ், பல பேட்டிகளில் விஜயை பற்றி கூறியிருப்பார். அடங்காத விஜய் ரசிகன். எங்க ஏரியாவுல அவர் பாட்டை போட்டு ஆடியிருக்கோம். அவரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதைவிட பெரிய பாக்கியம் எதுவும் இல்லை. விஜய் ரசிகன் வார்த்தையால் சொல்ல முடியாது. அப்படி ஒரு கொண்டாட்டம் தான் என அவரே தெரிவித்தார். பறை இசைக்கு நீயா நானா நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்டிருப்பார் மாரி செல்வராஜ். கிராமத்து வாழ்க்கையை சுவாசித்தாலும் சினிமாவில் அதை மக்களின் கொண்டாட்டமாக மாற்றி வருகிறார்.
சினிமா காதலன்: பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பைசன் படத்தின் பர்ஸ்லுக் போஸ்டர் இன்று வெளியாகவுள்ளது. மாரி செல்வராஜின் பிறந்தநாளையொட்டி வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த விழாவில் பேசிய மாரி, நான் இயக்கும் படத்தை தடை செய்தால் பயப்படமாட்டேன். நான் தரையில் இறங்கி ஆடுவேன். என் பிரச்னைகளை பாட்டின் மூலம் வெளிப்படுத்துவேன். எனக்கு பயம் கிடையாது. சினிமாவை என்னை தேர்ந்தெடுக்கவில்லை. நான் தான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன் என பகிரங்கமாக தனது பேச்சின் மூலம் தன்னை எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.
பரியேறும் பெருமாள் படத்தில் பரியன் சொல்லும் வார்த்தை மிகவும் ஆழமானது. இங்கே நீங்க நீங்களா இருக்கிற வரைக்கும் எதுவும் மாறப்போறது இல்லை. ஆனால், நா நம்புறேன் சார் நிச்சயம் ஒரு நாள் எல்லாம் மாறும் என்கிற நம்பிக்கை இருக்கு என தெரிவிப்பான். அதன் எதிரில் இருக்கும் ஜோவின் அப்பா உங்களை நல்லா வளர்த்திருக்காங்க தம்பி. பாப்போம் எதிர்காலத்துல எதுவும் நடக்கலாம் என்பதுபோலத்தான் மாரி செல்வராஜ் நம்பி கொண்டிருப்பார். அதேபோன்று தனக்கான வாய்ப்புகளை சினிமாவின் மூலம் மாற்றிகொண்டிருக்கும் மாரிசெல்வராஜூவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications











